இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
காலை சட்டப்பேரவை கூடியதுமே பேச அனுமதிக்கவில்லை என கூறி அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக பட்ஜெட்டில் கல்விக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என எதுவும் இடம் பெறவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே” என்று விமர்சித்தார்.
”விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனை இந்த அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களையும் ஏமாற்றியுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக அரசின் கடன் சுமையைக் குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் ஆலோசனை கூற அமைக்கப்பட்ட ரகுராம் ராஜன் தலைமையிலான குழு என்ன திட்டங்களை அரசிடம் முன்வைத்தது என்பது பற்றி எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை, வாத்தைஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்ப்பந்தல். இதை வாய் வாடகைதாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்திற்காகப் பாராட்டலாம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட யாராலும் இந்த பட்ஜெட்டை பாராட்ட முடியாது” என்றார்.
“நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.
கள்ள ஓட்டு போட்டவரைப் பிடித்துக்கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கள்ள ஓட்டுப்போட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தினார். இந்த நபரை சம்பவத்தன்று காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்த பிறகு போலீசார் முன்பே அவர் கல்லெடுத்து எறிந்தார். இதற்காக அவர் மீது எந்தவழக்கும் பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் வருவாய் வழிகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. வருவாய் அதிகரித்துள்ள நிலையில், கடன் குறைந்திருக்க வேண்டும், ஆனால் குறையவில்லை, அரசு சரியாகச் செயல்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் 2021-2022-ல் 1.08 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வாங்கப் போகிற கடன் 1.20 கோடி. ஆனால் முக்கிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை” என்று விமர்சித்தார்.
**-பிரியா**