தேய்பிறையில் தொடக்கமா? பௌர்ணமியில் திருவண்ணாமலை சென்ற ஸ்டாலின்

Published On:

| By Balaji

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது புதிய பிரச்சாரப் பயணத்திட்டத்தை பற்றி தெரிவித்திருந்தார்.

இதுபற்றி ஜனவரி 22ஆம் தேதி மின்னம்பலத்தில் [முதல்வராகி 100 நாட்கள்: அறிவாலயத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டம்](https://minnambalam.com/politics/2021/01/22/34/stalin-next-compaign-cabinet-meeting-arivalayam) என்ற தலைப்பில் முதன் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதற்கு பிறகு ஜனவரி 25ஆம் தேதி கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞர் இல்லத்திலிருந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தான் முன்வைத்த பிரசார திட்டத்தை பொது அறிவிப்பாக வெளியிட்டார் ஸ்டாலின். அதன்படி இன்று ஜனவரி 29-ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற அந்த பிரச்சாரத் திட்டத்தை தொடங்குகிறார்.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை புகார்களாகப் பெற்று அதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாட்களில் அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் இதற்காக தனித் துறை உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் முதல் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் தொடங்கப்படுமென்றும் அறிவித்தார் ஸ்டாலின்.

திருவண்ணாமலை திமுக மாவட்ட அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் மாவட்டச் செயலாளரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி மைதானத்தில் தான் இன்றைய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புகார் கொடுப்பவர்களுக்காக தனி கவுன்ட்டர்கள், கட்சியினருக்கான தனி இடங்கள், டிஜிட்டல் போர்டுகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஸ்டாலின் நிகழ்ச்சி பற்றி அவரது குடும்பத்தினரிடம் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.அதாவது ஜனவரி 28 ஆம் தேதி முழு பௌர்ணமி தினம். அடுத்த நாளான இன்று (29) பிரதமை திதி வந்துவிடுகிறது. பௌர்ணமி திதி நேற்று இரவு 12. 46 மணித்துளியோடு முடிந்துவிட்டது. அப்போதில் இருந்து பிரதமை திதி வந்துவிடுகிறது. மேலும் பௌர்ணமி முடிந்து தேய்பிறையும் தொடங்குகிறது. எந்த நிகழ்வையும் பிரதமையில் தேய்பிறையில் ஆரம்பிக்க மாட்டார்கள் என்பதால் இதுபற்றி ஜோதிடர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள்.

அப்போது ஜோதிடர்கள், “அக்னித் தலமான திருவண்ணாமலையில் ஒரு புதிய செயல்பாட்டைத் தொடங்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரம் தேய்பிறையில் தொடங்க வேண்டாம் என்பதால் நிகழ்ச்சிக்கு உரியவரான ஸ்டாலின் நிறைந்த பௌர்ணமியான முதல் நாளே திருவண்ணாமலை சென்றுவிட வேண்டும்”என்று கூறியுள்ளனர்.

இந்தத் தகவல் குடும்பத்தினர் மூலம் ஸ்டாலினுக்குத் தெரியப்படுத்தப்பட நிறைந்த பௌர்ணமியான நேற்று இரவே திருவண்ணாமலை வந்துசேர்ந்துவிட்டார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share