கிராம சபை என்ற பெயரில் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக முதல்வர் குற்றம்சாட்டினார்.
திமுக சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கிராம சபை பெயரில் கூட்டங்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எந்தத் தடையையும் எதிர்கொள்ளத் தயார் என அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதில், அதிமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி அளித்து வருகிறார்.
இதேபோல வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஈரோடு மாவட்டம் பவானியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்கள் சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார். மக்கள் சபையை நடத்தி எந்த மக்களுக்கு ஸ்டாலின் நல்லது செய்துள்ளார் எனக் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதே போல மக்கள் சபைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, மக்கள் பிரச்சினைகள் எதையாவது தீர்த்து வைத்தார்களா? அல்லது மக்கள் அளித்த மனுவையாவது என்னிடம் வந்து கொடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர்,
“எதுவும் இல்லை. கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கை” என்று குற்றம்சாட்டினார்.
**எழில்**�,