கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் நேற்று உயிரிழந்த தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும், கன்னியாகுமரி எம்.பி.யுமான வசந்தகுமாரின் உடல் இன்று (ஆகஸ்டு 29) காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படுமென்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அவர் உடல் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படவில்லை.
நேற்று மாலை, வசந்தகுமாருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே மருத்துவப் பாதுகாப்புகளுடன் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க அனுமதிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை திநகரில் உள்ள வசந்தகுமாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிறகு, திடீர் மாற்றமாக அவரது உடல் சத்தியமூர்த்தி பவனுக்கு எடுத்துச் செல்லப்படாமல் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்கள் மட்டும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு புதுவை முதல்வர் நாராயணசாமி வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சத்தியமூர்த்தி பவனில் அல்லாமல் காமராஜர் அரங்கத்தில் வசந்தகுமாரின் உடல் வைக்கப்பட்டது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் அழகிரி கூறுகையில், “வசந்தகுமாரின் துணைவியார் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அதில் அவர் உறுதியாகவும் இருக்கிறார். அவரை நேரில் சந்தித்துப் பேசி விட்டு வந்தேன். அவர்கள் மரபுப் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சத்தியமூர்த்தி பவனில் நிறுத்தி இரண்டு மணி நேரம் செலவானால், நேரம் தவறி விடும். எனவே கடைசி நேரத்திலாவது எங்களது முடிவுக்கு விடுங்கள் என்று அவரது துணைவியார் தெரிவித்தார். எனவே சத்தியமூர்த்தி பவனில் உடல் வைக்கப்படுவதைத் தவிர்த்து விட்டோம்” என்றார்.
அரசின் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படுவதற்கு அனுமதி கிடைக்கவில்லையா என்று கேட்டதற்கு. “ இதற்கு எந்தத் தடையும் இல்லை. அனுமதி எல்லாம் கிடைத்தது” என்று குறிப்பிட்டார் அழகிரி.
புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி வலுவான இயக்கமாக மாறுவதற்கு அரும்பாடுபட்டவர் வசந்தகுமார். 25ஆண்டுக் காலம் எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்துக்காகக் கூட அவர் என்னை அழைத்திருந்தார். அந்த பிரச்சாரத்தில் நானும் கலந்து கொண்டேன். 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கன்னியாகுமரி அழைத்திருந்தார். உழைப்பால் உயர்ந்த ஒரு தலைவர். தனிப்பட்ட முறையில் அவரது இறப்பு எனக்குப் பேரிழப்பு” என்று தெரிவித்தார்.
காமராஜர் அரங்கத்துக்கு அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் வசந்தகுமாரின் உடல் சாலை வழியாக அவரது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில், அவரது தந்தையாரின் கல்லறைத் தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்படுகிறது. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான இந்த கல்லறைத் தோட்டத்தில் அவருக்கு நினைவிடம் எழுப்பப்பட வேண்டும் என்று காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.
**-கவிபிரியா**�,