தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும் சர்ச்சையையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது எட்டு வழிச் சாலை எதிர்ப்புப் போராட்டம். சேலம் முதல் சென்னைக்கு எட்டு வழிச் சாலை அமைக்க அதிமுக அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் எட்டு வழிச் சாலை அமைக்க ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. திமுக இது தொடர்பாக நீதிமன்றத்தையும் நாடியது. மேலும் பூவுலகின் நண்பர்கள், பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு எட்டு வழி சாலைக்காக வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்தது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதில் உச்ச நீதிமன்றம் எட்டு வழிச் சாலை அமைக்கலாம், புதிய அறிவிக்கையை வெளியிட்டு திட்டத்தை தொடங்கலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறி தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் முதல்வரான பிறகு 2021 ஜூன் மாதம் 17 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகளில் எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்த மெமோரண்டத்தின் குறிப்புகளில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் என்ற தலைப்பில், ‘சென்னை-சேலம் பசுமை வழிச் சாலை’ என்று இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, ‘எதிர்க்கட்ச்சியாக இருந்தபோது எட்டு வழிச் சாலையை எதிர்த்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பிரதமரிடம் மனு அளிக்கிறார்” என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதியே தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பிரதமரிடம் தமிழக முதல்வர் இன்று வழங்கிய சுருக்க உள்ளடக்கக் குறிப்பில் 15 (e) குறிப்பிடப்பட்டுள்ள சென்னை-சேலம் பசுமை வழி சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று தெளிவுபடுத்தியது.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் 15, 16 தேதிகளில் தர்மபுரியில் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்களை நடத்தினார். அதில் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு எட்டு வழிச் சாலைக்காக தர்மபுரி மாவட்டத்தில் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்கிறதோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தி மனுக்கள் அளித்திருந்தனர். இந்த மனுக்கள் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு அனுப்பி பதில் அளிக்குமாறு கேட்டிருந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
இந்த மனுக்களுக்கு பதிலளித்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி, தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் முகுந்தன் ஒரு கடிதத்தை தர்மபுரி மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி சந்திரகுமாருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த கடிதத்தில், ‘தர்மபுரி மாவடத்தில் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
ஏற்கனவே எட்டு வழிச் சாலைக்காக நில எடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டபோது தனியாரின் பட்டா நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பிரிவு செய்து பெயர் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தனியார் நிலங்கள் அந்தந்த பட்டாதார்கள் பெயரிலேயே உள்ளது. எனவே பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை” என்று கூறியிருந்தார்.
இவ்வாறு எட்டு வழிச் சாலை திட்டம் பற்றி தமிழக அதிகாரிகள் விவசாயிகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும்போதே… ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 2025க்குள் எட்டு வழி சாலைத் திட்டம் முடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஜனவரி 21 ஆம் தேதியும் எட்டு வழிச் சாலை என்ற பெயரைக் குறிப்பிடாமல் தமிழக திமுக அரசுக்கு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் தமிழகத்தில் ஸ்தம்பித்துவிட்டதாகவும், இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிசினஸ்லைன் ஆங்கிலப் பத்திரிகை நடத்திய கவுண்ட் டவுன் டு பட்ஜெட் 2022 என்ற சிறப்பு நிகழ்ச்சி ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி,
“தமிழகத்தில் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். எங்கள் பணி நின்று விட்டது.தமிழகத்தின் அனைத்து சாலைத் திட்டங்களையும் மதிப்பாய்வு செய்து எங்களுடன் ஒத்துழைக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் கட்டுமானப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் வனத்துறை அனுமதி போன்ற சிக்கல்களால் சிக்கியுள்ளன. நிதியைப் பற்றிப் பிரச்சினை இல்லை. தமிழகத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில், கட்டுமானத்திற்கான பல்வேறு வகையான பொருட்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, அமைச்சர், முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். மாநிலத்தின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தால், தமிழகத்தில் சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமை அளிப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.
கேரளாவில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், முதல்வர் பினராயி விஜயன் மிகவும் முனைப்புடன் இருக்கிறார். மேலும் பல முடிவுகளை எடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உதவுகிறார். அதனால் நாங்கள் இப்போது கேரளாவுக்கு நிறைய திட்டங்களை வழங்குகிறோம். கர்நாடகாவிலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐதராபாத்-சென்னை நெடுஞ்சாலை உட்பட பல திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம். தென்னிந்தியாவில், நிறைய திட்டங்கள் உள்ளன. தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்” என்று கூறிய நிதின் கட்கரி, தொடர்ந்து பேசும்போது,
“நான் கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களை மேம்படுத்தினேன். சென்னையில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை. நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் தமிழகத்தின் மொத்த உள்கட்டமைப்பில் 100% மாற்றத்தை உருவாக்கலாம். இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி அடையும். ஏற்றுமதி அதிகரித்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த விஷயத்தில் நான் மிகவும் நேர்மறையாக இருக்கிறேன் ”என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் சேலத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு போராட்ட இயக்கங்கள் மீண்டும் கூடி ஆலோசனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
**- ஆரா**
�,”