ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் பொதுக் கூட்டம் நேற்றிரவு (பிப்ரவரி 27) மதுரையில் நடைபெற்றது. அதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்வில் பேசிய அமைச்சர், “பேரறிஞர் அண்ணா வளர்த்த கட்சியான திமுகவை ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனத்திடம் அடமானம் வைத்துவிட்டார். இது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது போல் இருக்கிறது. தமிழக மக்களுக்கு என்ன தேவை என்று தமிழனுக்கு தெரியுமா பீகார்காரருக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய கட்சி அதிமுக என்று குறிப்பிட்ட செல்லூர் ராஜு, “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மலையாளியாக இருந்தாலும் அவர் ஆரம்பித்த அதிமுக கட்சியை ஒன்றரை கோடி தொண்டர்கள் தூக்கி நிறுத்தி இருக்கிறோம். இதில் எங்கு சாதி, மதம், மாநில வித்தியாசம் உள்ளது. பிறப்பால் ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை திராவிட கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்” என்றும் விளக்கினார்.
**த.எழிலரசன்**
�,