சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியைப் பணியிட மாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரைக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த இவர், பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார். தேர்தல் ஆணையம், சுற்றுச்சூழல், கொரோனா வழக்குகள் மற்றும் சென்னை வெள்ளம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஒன்றிய, மாநில அரசுகளை விமர்சித்து தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த தகவல் கடந்த நவம்பர் 9ஆம் தேதி பொதுவெளியில் வெளியிடப்பட்டது. ஆனால், செப்டம்பர் 16ஆம் தேதியே கொலிஜியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவரை சிறிய உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்வது முதல்முறை கிடையாது என்பதால், இதற்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
பதவியேற்று 10 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய தலைமை நீதிபதியை திடீரென்று பணியிட மாற்றம் செய்வதற்கான காரணம் என்ன? நேர்மையாகவும், விரைவாகவும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய திறமையான, அனுபவம் வாய்ந்த நீதிபதியை, சிறிய உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? எதன் அடிப்படையில் பணியிட மாற்றம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது? பணியிட மாற்றம் பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்று சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தப் பணியிட மாற்றத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கடிதம் எழுதினார். ஒருபடி மேலே சென்று தலைமை நீதிபதியைப் பணியிட மாற்றம் செய்யக் கூடாது, அதை ரத்து செய்ய வேண்டும், அவர் இங்கேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
முதலில் 237 வழக்கறிஞர்கள் கடிதம், இரண்டாவது 31 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தீர்மானம், வழக்கறிஞர் அமைதிப் போராட்டம் எனப் பல்வேறு கட்டங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்த பரிந்துரைக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சக கூடுதல் செயலாளர் நேற்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் அளித்த பரிந்துரைக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆர்ட்டிகிள் 222, பகுதி (1)-ன் அடிப்படையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்குமாறு நீதிபதி பானர்ஜிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,