பாமகவினர் மீது கொலை முயற்சி வழக்கு: ஸ்டாலின் அட்டாக்!

politics

அரசியல் கட்சியினர், அமைப்பினர் அல்லது தனிநபர்கள் போராட்டங்களின் போது அரசு பஸ்களை தாக்குவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் தொடர்கதையாக நிலவக்கூடிய விஷயம்தான். ஒரு கட்டத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை சேதம் விளைவிப்போரிடம் அந்தக் கட்சியின் தலைமையே அதற்கான நஷ்டஈட்டை அளிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனாலும் தொட்டதற்கெல்லாம் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடியை உடைப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

போலீசாரும் அப்படிப்பட்ட நபர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கு என்ற வழக்கை பதிந்து விடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இப்போது திமுக அரசு புதியதொரு நடைமுறையை பின்பற்ற தொடங்கியிருக்கிறது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி யினரும் அந்தக் கட்சிக்கு உட்பட்ட வன்னியர் சங்கத்தினரும் வட மாவட்டங்களில் பரவலாக போராட்டங்களை கையிலெடுத்தனர். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை தாண்டி, ”இந்த வழக்கில் திமுக அரசு சரியானபடி வாதத்தை முன்வைக்கவில்லை. அதனால் தான் இந்த வழக்கில் நீதிமன்றம் இப்படிப்பட்ட உத்தரவை அளித்துள்ளது. எனவே இது திமுகவின் சதிதான்” என்று பாமகவினர் தங்களுக்குள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அதன் பின்னர் திமுக அரசை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்கள். இந்தப் பின்னணியில் தீர்ப்பு அளிக்கப்பட்ட தேதியிலிருந்து தொடர்ந்து அரசு பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி மின்னம்பலத்தில் நேற்று [பாமகவின் பகீர் திட்டம்- போலீஸ் அலர்ட்](https://www.minnambalam.com/politics/2021/11/07/21/reservation-vanniyar-high-court-pmk-bus-glass-;police-alert) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழலில் அரசுப் பேருந்துகளை உடைத்தவர்கள் மீது வழக்கமான நடவடிக்கையான பொதுச் சொத்தை சேதப்படுத்தும் வழக்கு என்பதை தாண்டி இப்போது திமுக அரசு கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து வருகிறது. இது பாமக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போலீஸாரும் இந்த புதிய நடைமுறையை ஆச்சரியமாகவே பார்க்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல்நிலையத்தில் நவம்பர் 6ஆம் தேதி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை இதற்கு ஓர் உதாரணமாக இருக்கிறது. நவம்பர் 6ஆம் தேதி பண்ருட்டியில் இருந்து கடலூர் மெயின்ரோட்டில் திருவதிகை ஜெயா கேஸ் குடோன் எதிரில் அரசு பேருந்து மாலை ஐந்தரை மணியளவில் சிலரால் தாக்கப்பட்டது. இதுகுறித்து அந்த அரசுப் பேருந்தின் டிரைவர் மாயகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் அன்றே பண்ருட்டி காவல்நிலையத்தில் தெரிந்த, சந்தேகத்திற்குரிய மற்றும் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முத்து நாராயண புரத்தைச் சேர்ந்த சிவா, திருவதிகை யைச் சேர்ந்த குமரேசன் ஆகியோர் அடையாளம் தெரிந்தவர்களாக முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

’வன்னியர் இட ஒதுக்கீட்டை ஏண்டா ரத்து செஞ்சீங்க?’ என்று டிரைவரையும், கண்டக்டரையும் பார்த்து கெட்ட வார்த்தைகளைப் பேசி பேருந்தின் முன் பக்கம் கல்வீசினார்கள். கண்ணாடியை உடைத்துக் கொண்டு எங்கள் தலை நோக்கி வந்தது. நாங்கள் குனிந்துவிட்டதால் பேருந்துக்குள் சென்று கற்கள் விழுந்தன’ என்று அந்த புகாரில் மாயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் இவர்கள் மீது ஐபிசி 341, 294b, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கூடவே ஐபிசி 307 பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 307 என்பது கொலை முயற்சிக்கான வழக்கு. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் தடுப்புச் சட்டப்படி வழக்கு தொடுத்து வந்த போலீசார் திடீரென இப்போது அரசு பேருந்து கண்ணாடி உடைப்புக்கு கொலை முயற்சி வழக்கையும் சேர்த்து பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் பின்னணி குறித்து காவல்துறை மற்றும் கோட்டை வட்டாரங்களில் விசாரித்தோம்.

“வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது. இதை அப்போது அதிமுக விலேயே தென்மாவட்ட பிரமுகர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் வட மாவட்டங்களிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி அவசரமாக இந்த இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இந்த நிலையில் ஆட்சி மாறியதும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினை பாமக சார்பில் ஜிகே மணி உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர் அப்போது கடந்த ஆட்சி காலத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பித்து அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பித்தார். அப்போது பாமக சார்பில் இதனை வரவேற்றனர்.

இதற்கிடையே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்ட வழக்குகளில் 10.5% இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்புக்குப் பிறகு முதல்வரை பாமக குழுவினர் சந்தித்தபோது, ‘சட்டரீதியாக இந்த விஷயத்தில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இட ஒதுக்கீட்டை மீட்டுத் தருவதாக உறுதியளித்தார். ஆனாலும் பாமகவினர் தங்களுக்குள் கூட்டம் போட்டு இந்த விவகாரத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றுவிட்டால் அதன் முழுப் பெருமையும் திமுகவுக்கு சேரும் என்று ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் ஏதோ திமுக அரசு நீதிமன்றத்தில் சரியாக வாதாடவில்லை என்ற காரணத்திற்காக அரசு பஸ்களை உடைக்கும்படி பாமகவின் கீழ்மட்ட தொண்டர்களை தூண்டி விட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பாமகவினர் அரசுக்கும் உண்மையாக இல்லை, தங்களது வன்னியர் சமுதாயத்திற்கும் உண்மையாக இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெடவும் காரணமாக இருக்கிறார்கள்.

அரசுப் பேருந்துகள் கடந்த வாரத்தில் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து முதல்வரிடம் நவம்பர் 6 ஆம் தேதி காவல்துறை, உளவுத்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். முதல்வர் நேரடியாக உத்தரவாதம் அளித்தும், மேல் முறையீடு செய்வதாக அரசு அறிவித்தும் அரசியல் காரணங்களுக்காக அரசுப் பேருந்துகள் தொடர்ந்து தாக்கப்படுவதை உளவுத்துறையினர் முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர்.

இதற்குப் பிறகு நடந்த ஆலோசனையில் தான் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வழக்கு மட்டுமல்லாமல், அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்து அதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள் என்ற வகையில் கொலை முயற்சி வழக்கும் அவர்கள் மீண்டும் பதிவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தான் தற்போது அரசு பேருந்து பேருந்துகளை உடைக்கும் பாமகவினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வருகிறார்கள் போலீசார். இதற்கு மேலும் இதே ரீதியில் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட பாமக நிர்வாகிகள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சவும் அறிவுறுத்தியுள்ளார் முதல்வர்” என்கிறார்கள் காவல்துறை கோட்டை வட்டாரங்களில்.

வடமாவட்டங்களில் மட்டுமே இதுவரை பஸ் உடைப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. போலீஸ் மூலம் ஸ்டாலின் ஏவியுள்ள இந்த புதிய அட்டாக்கால் பாமக நிர்வாகிகள் ஷாக் ஆகியிருக்கிறார்கள்.

**-வணங்காமுடி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *