வைகுண்டர் கோயிலின் அரசியல் சென்டிமென்ட்: வியந்த நயன் தாரா

Published On:

| By Balaji

நடிகை நயன் தாராவின் அடுத்தடுத்த கோயில் விசிட்டுகள் ஆன்மிகம் தாண்டிய அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது. குமரியில் கோயில் கொண்டுள்ள பகவதி அம்மனுக்கு மூக்குத்தி அம்மன் என்றும் பெயர் உண்டு. பகவதி அம்மனின் யோக சக்தி மூக்குத்தியில் இருப்பதாக நம்பிக்கை வைத்து அந்த மூக்குத்தியையும் வழிபடுகின்றனர் மக்கள். பகவதி அம்மனை பற்றிய கதை என்பதால் மூக்குத்தி அம்மன் என்று படத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

பகவதி அம்மனை வழிபடுபவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதால் மூக்குத்தி அம்மன் படப் பிடிப்பில் இருப்பவர்கள் அனைவரும் விரதம் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க சைவ உணவே யூனிட்டுக்கு பரிமாறப்படுகிறது. படப்பிடிப்பின் கடை நிலை ஊழியர் தொடங்கி, இயக்குனர் வரை அனைவரும் விரதம் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு இடையே கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வருகிறார் நயன் தாரா. ஏற்கனவே திருச்செந்தூர் முருகன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், பகவதி அம்மன் கோயில்களில் வழிபட்ட நயன் தாரா நேற்று (டிசம்பர் 17) குமரியில் இருக்கும் சாமித் தோப்பு வைகுண்டசாமி கோயிலுக்குச் சென்றார்.

சாமித் தோப்பு வைகுண்ட சாமி கோயிலில் சன்னிதானம் என்பது பெரிய ஒரு நிலைக்கண்ணாடி மட்டுமே இருக்கும். அதில் பொட்டு அணிவிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து வியந்த நயன் தாரா கேட்க, ‘தெய்வம் என்பது நமக்குள்தான் இருக்கிறது. அதை உணர்த்தவே இங்கே சன்னிதானத்தில் கண்ணாடி மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்’ என்று கோயிலில் உள்ளவர்கள் பதில் அளித்துள்ளனர். பின்னர் வைகுந்தர் சமாதியிலும் வணங்கினார் நயன் தாரா. பக்கத்திலுள்ள கேரளாதான் நயன் தாராவின் மாநிலம் என்றாலும் இங்கே அவர் வந்ததில்லை என்பதால் தலைப்பாக்கட்டு உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

இதுமட்டுமல்ல, ‘ஜெயலலிதா அவ்வப்போது இந்த கோயிலுக்கு வந்து செல்வார். அதன் பிறகுதான் அவரது அரசியல் வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட்டது. தேவகவுடா , சந்திரசேகர் போன்றோர் இங்கு வந்து சென்ற பிறகுதான் பிரதமராகும் அதிர்ஷ்டம் கிடைத்தது. இப்படி நிறைய சொல்லலாம். நீங்கள் இங்கு வந்துவிட்டீர்கள். இனி உங்களுக்கு பொது வாழ்க்கை யில் திருப்பம் ஏற்படும்” என்று நயன் தாராவிடம் வைகுண்டர் கோயிலின் மகிமையை படக் குழுவைச் சேர்ந்த சிலர் எடுத்துச் சொல்ல, அப்படியா என்று தாங்கமுடியாத சிரிப்போடு ரியாக்ட் செய்திருக்கிறார் நயன்தாரா.

கடந்த வாரம் அவர் திருச்செந்தூர் வந்திருந்தபோது, பாஜக பிரமுகர் நரசிம்மன் நேரடியாகவே சந்தித்து பாஜகவுக்கு வருமாறு அழைப்பு கொடுத்திருக்கிறார். அண்மையில் தெலங்கானா பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் என்கவுன்ட்டர் செய்தபோது வழக்கத்துக்கு மாறாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் நயன் தாரா.

“சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று வைகுண்டர் கோயிலுக்கு வந்து சென்றிருக்கும் நயன் தாராவிடம் அரசியல் ஆர்வம் ஊட்டப்பட்டிருக்கிறது. எதிர்கால உலகை பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற நயன் தாரா அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் மூக்குத்தி அம்மன் வட்டாரத்தினர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share