டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து செல்லும் 11 பேரும் தங்கம் வென்றுதான் திரும்புவார்கள் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஐந்து வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐந்து பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான காசோலை வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு வீரர்களின் பெற்றோர்களிடம் காசோலையை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், “தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்வளவு பேர் பங்கேற்பது முதல் முறையாகும். அதிலும் ஐந்து வீராங்கனைகள் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
முதலில் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களுக்கும், வீரர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திய பயிற்சியாளர்களுக்கும் முதல்வர் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விளையாட்டுத்துறையில் முதல்வர் தொலைநோக்குப் பார்வையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளார். அதில் ஒலிம்பிக் போட்டிக்காகத் தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அங்கு திறமை வாய்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் விளையாட்டு நகரம் உருவாக்கப்படும். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர்களுக்கும் தனியாக வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருகிறது.
அனைவரும் தங்கம் வெல்வதே தமிழ்நாட்டின் கனவாகும். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் 11 பேரும் தங்கம் வென்றுதான் திரும்புவார்கள். அவ்வாறு வெற்றி பெற்று வரும்போது இந்தியாவின் பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பும். தமிழ்நாட்டிலுள்ள பல லட்சம் இளைஞர்கள் விளையாட்டில் பங்கேற்க ஒரு தூண்டுதலாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இந்த நேரு விளையாட்டு அரங்கம் திறந்தது முதல், இங்கு உலக அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது வரை எனக்கு நினைவிருக்கிறது. திமுக ஆட்சி, பொறுப்பேற்று இந்த விளையாட்டு அரங்கில் நடைபெறும் மூன்றாவது நிகழ்ச்சி இதுவாகும். ஊக்கத்தொகை மற்றும் வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்று பேசினார்.
**-வினிதா**
�,”