நீட் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!

Published On:

| By Balaji

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு பாதிப்பு மற்றும் மாற்று வழி குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை 3 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீட் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராக மாநில அரசு செயல்பட முடியாது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்கவேண்டும். ஆனால், அதை மீறும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது ஏற்புடையது அல்ல.

உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையிலும், தேசிய நலன் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஏற்கனவே ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பை படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூன் 29) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், நீட் பாதிப்பு குறித்து ஆராய குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்களுக்கான பாதிப்புகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதனால்தான், தமிழக அரசு நீட் பாதிப்பு குறித்து ஆராய குழு அமைத்தது.

சட்டப்பேரவையில் அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறிவிட்டு, தற்போது அதற்கு நேர்மாறாக பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரே நீட் சம்பந்தமாக, ஏ.கே.ராஜன் கமிட்டியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இது பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிகாட்டியுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்த தெளிவான முடிவை பாஜகவும் அதன் தோழமைக் கட்சியான அதிமுகவும் தெரிவிக்க வேண்டும்.

இதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர் நீதிமன்றத்தில் ஜூலை 5ஆம் தேதி தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

”இந்த வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஏழு நீதிபதிகள் ஆய்வு செய்யாமல் தீர்ப்பு வழங்கினார்களா? இது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல் என கரு.நாகராஜன் பதிலளித்துள்ளார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share