நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், மீண்டும் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இன்று(பிப்ரவரி 8) சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடந்தது.
சட்டப்பேரவைக் கூடியதும், சபாநாயகர் அப்பாவு தொடக்க உரையாற்றி, ஆளுநர் அனுப்பிய கடித விவரங்களை படித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை பேச சபாநாயகர் அழைத்தபோது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேச முயன்றார்.
அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கு நேரம் தருகிறேன்.இப்போது உட்காருங்கள் என்று சபாநாயகர் கூறியபோதிலும், நயினார் நாகேந்திரன் பேச முயன்றார். சபாநாயகரும் வாய்ப்பு கொடுத்தார்.
ஏ.கே.ராஜனின் குழு அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் கருத்து கூறவில்லை. கடந்த முறை நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் கூறுவது தவறு. அப்போது நாங்கள் வெளிநடப்பு செய்தோம். பிறகு எப்படி ஒருமனதாக நிறைவேற்றப்படும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டார்.
இடையே குறுக்கிட்ட சட்டமன்ற அவை முன்னவர் துரைமுருகன், கடந்த முறை பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த முறையில், பேரவையில் இருந்த உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்தும் நயினார் நாகேந்திரன் பேச முற்பட்டபோது, “வெளிநடப்பு செய்வதற்கு ஏன் இவ்வளவு பில்டப். போகிறதாக இருந்தால் போங்கள்” என்று சபாநாயகர் கூறினார்.
தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “ நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற இன்று மீண்டும் சட்ட மன்றத்தில் கொண்டு வந்துள்ளனர். இது தேவையானதா?. எல்லா மாணவர்களும் சமூக நீதியுடன் பயில நீட் தேவை என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு . எல்லா மாணவர்களுக்கும் சமூக நீதியோடு அனைவருக்கும் இடம் கிடைக்கும் வகையில் நீட் உள்ளது. இந்த விவகாரத்தை அரசியலாக்க இந்த தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்படுகிறது. அதனால், அதை மறுத்து நாங்கள் வெளி நடப்பு செய்தோம்” என்று கூறினார்.
**-வினிதா**