அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி: மத்திய அமைச்சர்!

Published On:

| By Balaji

பாஜகவில் உள்ள நாம் வலிமைமிக்கவர்கள்தான் என்றாலும், நமது கட்சி மிகவும் வலிமையாக இல்லை. இதனால் 234 சட்டசபை தொகுதிகளிலும் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனால், அடுத்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என மார்ச் 6இல் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

தமிழகத்தின் அடுத்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக வேண்டும் என விருதுநகரில் பா.ஜ.வின் தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது, 2016இல் நான் தமிழகம் வந்தபோது பாஜக இருந்ததைவிட இன்று கட்சி நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற பெரிய தலைவர்கள் இல்லாததால் முதன்முறை ஓட்டளிப்பவர்கள் மூளையை சோதித்துதான் இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க போகின்றனர். முகங்களைப் பார்த்து ஓட்டளிக்கப் போவதில்லை. நாம் வலிமைமிக்கவர்கள்தான் என்றாலும், நமது கட்சி மிகவும் வலிமையாக இல்லை. இதனால் 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட முடியவில்லை. ஆனால் அடுத்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்படுத்தி கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் அதிமுக நல்ல திட்டங்களைத்தான் செயல்படுத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் நம் இலக்கு திமுகவை வீழ்த்துவதுதான். அதிமுக கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி பொறுப்பில் அமர்த்த வேண்டும். மத்திய அரசின் செயல் திட்டங்களை கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபடுங்கள். பாஜக கருத்து பலம்மிக்க கட்சி. ஒன்றிணைந்து அதை உயர்த்துவோம்” என்றார்.

மேலும், “தேர்தலுக்குள் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 10 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும்” என மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் ராஜபாளையத்தில் பாஜகவினர் மத்தியில் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “பாஜகவின் வளர்ச்சி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது. தொண்டர்களிடம் உணர்ச்சி, உத்வேகத்தை பார்க்கிறேன். பிரதமர் மோடி தினமும் 20 மணிநேரம் நமக்காக உழைத்து வருகிறார். நமக்காக உழைப்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆறரை ஆண்டாக பொது மக்களுக்கு மத்திய அரசு செய்துள்ள எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களிடம் நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.

234 தொகுதியிலும் முன்பு போட்டியிட்டுள்ளோம். தற்போது வெற்றியைக் குறிக்கோளாக கொண்டு 20 தொகுதிகளைப் பெற்றுள்ளோம். அதிமுக கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இது ஒரு பரீட்சை. திமுக ஆட்சி என்பது நில அபகரிப்பு, திருட்டு, இருட்டு என்பதாகும். குடும்ப வளர்ச்சி ஒன்றே அவர்களது நோக்கம்.

பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியைப் போன்று குண்டர் ஆட்சி மற்றும் கொள்ளைக்கார ஆட்சியை திமுக செய்யும். அவர்கள் பரப்பும் பொய்ப் பிரச்சாரங்களை கவனித்து அதற்கான விளக்கங்களைத் தயார் செய்து நாம் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

முன்னதாக ராஜபாளையம் பாஜக தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நடிகை கவுதமி, அமைச்சர் வி.கே.சிங்கை வரவேற்றார்.

**- சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share