இன்று காலை 7 மணி முதல் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவியும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் ஓட்டு போட பூத் மாறி சென்றதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் தனது வாக்கை செலுத்துவதற்காக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று காலை சென்றார்.
ஆனால்,அங்கு அவருக்கு வாக்கு இல்லை என்றும், இது 837வது வாக்குசாவடி, தங்களுக்கு 825 வது வாக்குச் சாவடியில்தான் வாக்கு உள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, தனக்கு வாக்கு இருக்கும் சாவடி அமைந்துள்ள சி.எம்.எஸ் பள்ளிக்கு சென்று வானதி சீனிவாசன் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “மாநகராட்சியில் வார்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டு, பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. நான் வாக்களிக்க வந்த பள்ளியில் எனக்கு ஓட்டு இல்லை என்று கூறிவிட்டனர். அதனால் வேறொரு பள்ளியில் வாக்களித்தேன். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தவில்லை. தேர்தலை நியாயமாக நடத்துவதிலும் கவனம் செலுத்தவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில், காரில் பாஜக கொடியுடன் வானதி சீனிவாசன் வந்தது தொடர்பாக பாஜக, திமுகவினர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அப்பகுதியில் இருந்து வெளியே அனுப்பினர்.
**-வினிதா**