தஞ்சை பள்ளி மாணவி மரணத்தை கையில் எடுத்துள்ள பாஜக கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அரியலூரைச் சேர்ந்த தஞ்சை பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. எதனால் மாணவி தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கட்டாய மதமாற்றம் காரணமாகதான் மாணவி உயிரிழந்தார் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் இன்று(ஜனவரி 22) தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும், மதமாற்றம் செய்ய முயலும் அந்த பள்ளியை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது, ”தூய இருதயமேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. மக்கள் வரி பணத்தில் நடக்கும் பள்ளியில் எப்படி மதமாற்றம் செய்யலாம். மதமாற்றம் செய்வதற்கு இது சர்ச் கிடையாது. இந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டவர்களை இதுவரை கைது செய்யவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, அக்குழு ஒருவாரத்திற்குள் அறிக்கை அளிக்கும் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி. தெரிவித்திருந்தார்.
ஆனால் அறிக்கை வருவதற்கு முன்னரே செய்தியாளர்களை கூட்டி, மாணவி மரணத்துக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று கூறுகிறார். மதமாற்றம் மற்றும் இந்து விரோத செயலுக்கு உரம் போடும் விதமாக தமிழ்நாடு அரசு நடப்பதால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே குற்றவாளிகளை தண்டிக்கும். நாங்கள் தமிழ்நாடு அரசை நம்பவில்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். மதமாற்ற தடை சட்டம் மட்டுமே இதுபோன்ற பல மாணவிகளின் உயிரிழப்பை தடுக்கும் என்பதால் அச்சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். எல்லா உயிரிழப்பும் ஒன்றுதான். மணப்பாறையில் தந்தை போட்ட போர்வெல்லில், சிறுவன் விழுந்து உயிரிழந்த போது திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் ஓடி சென்று பார்த்தனர். மேலும் கட்சி சார்பாக நிதி வழங்கினார். ஆனால் ஏன் இந்த மாணவி உயிரிழப்புக்கு அவர்கள் ஏன் வரவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
தஞ்சை மாணவி மரணத்தை, மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பாஜகவின் முயற்சி கண்டிக்கத்தக்கது. மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கையும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி, மாணவியின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
**-வினிதா**
�,”