கமலாலய தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரிக்க அண்ணாமலை கோரிக்கை!

Published On:

| By admin

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தமிழ்நாடு பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதையடுத்து பதற்றமான போலீசார் உடனடியாக சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்கிற கருக்கா வினோத்தை கைது செய்திருக்கிறார்கள்.

” கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பவர். அந்த காவல் நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் வினோத் மீது நிலுவையில் இருக்கின்றன.
வினோத்திடம் விசாரித்தபோது நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரத்தில் இதை செய்ததாக தெரிவித்திருக்கிறார்” என்று , செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள சென்னை மாநகர போலீசார்…

“இந்த சம்பவம் அரசியல் ரீதியிலோ மதரீதியிலோ நடத்தப்படவில்லை. வினோத் குடிபோதையில் இவ்வாறு குற்றங்கள் செய்யும் மனநிலை கொண்டவர். விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என்று தெரிவித்துள்ளனர்.

போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது….”இந்த வினோத் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால் அவ்வப்போது போலீசார் அவரை தேடி வீட்டுக்கு செல்வார்கள். 2017 ஆம் ஆண்டு அந்த வகையில் வீட்டுக்கு சென்றபோது வினோத் இல்லாததால் அவரது அம்மாவை தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
அந்த கோபத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசினார் வினோத்.

மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்.
நேற்று நள்ளிரவு கமலாலயம் அருகே வந்த வினோத் அங்கே வாசலில் காவல் பணியில் இருந்த போலீஸ்காரரை, ‘ஓரமா போய்யா… உன் மேல விழுந்திட போகுது’ என்று அவரை ஓரமாக அனுப்பிவிட்டு தான் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்.
போலீஸ் விசாரணையின்போது நீட் தேர்வுக்கு தடைவிதிக்க மறுப்பதால் தான் இதை செய்தேன் என்று சொல்லியிருக்கிறார். ‘நீ டாக்டருக்கு படிக்க போறியா!’என்று போலீசார் கேட்க…’நான் படிச்சாதான் எதிர்க்கணுமா?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார் வினோத்” என்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ள நீட் என்ற காரணம் நகைச்சுவையாக இருக்கிறது. சினிமா போலீசார் சொல்வது போல் இருக்கிறது.

நாகப்பட்டினத்தில் பாஜக நிர்வாகியின் கார் தாக்கப்பட்டுள்ளது‌. சென்னை, திருப்பூர், வேலூர் ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
தமிழக பாஜக அலுவலகமே பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாகவே போலீசார் பாஜக அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அடையாளங்களை அகற்றி உள்ளனர்.
இது எங்களுக்கு சந்தேகத்தை அதிகரிக்கிறது. போலீசார் முதல்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ‌.ஏ‌. விசாரிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

**வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share