தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு திமுகதான் காரணம்: எல்.முருகன்

politics

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு திமுகதான் காரணம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கோயில் வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வடபழனி முருகன் கோயிலில் பாஜக தலைவர் எல்.முருகன் இன்று(ஜூன் 28) சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு தடுப்பூசிகள் வாங்கப்பட்டது, மாவட்டங்களுக்கு எவ்வளவு பிரித்து கொடுக்கப்பட்டது, இதுவரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர், எவ்வளவு வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த மாதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு 42 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1.28 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களில் திமுகவினர் அதிகாரிகளை மிரட்டி டோக்கன்களை பறிப்பதை நிறுத்தினாலே தடுப்பூசி முறையாக கிடைக்கும். தமிழ்நாட்டுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை.

தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று திமுக கூறியிருந்தது. அதற்கான எந்த முயற்சியையும் அரசு இதுவரை எடுக்கவில்லை. சொல்லப்போனால், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதுபோன்று மாதந்தோறும் தாய்மார்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று கூறியிருந்தார்கள். அதுபற்றிய அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார்களோ, அதை முதலில் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு முதலில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கட்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ நாங்கள் தேர்தல் செலவுக்கு 4 கோடி கொடுத்தால்தானே அதைப்பற்றி விசாரிக்க முடியும். கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. அதுபோன்று, எச்.ராஜா மீது நடைபெறும் விசாரணை உட்கட்சி விவகாரம். நேற்று புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது ஒன்றிய அரசு என்ற வார்த்தை எதன் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்த பின்னர் பேசுகிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. மதியத்திற்கு மேல் தட்டுப்பாடுதான்.தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளது” என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.