cஅபின் கடத்தல்: பாஜக பிரமுகர் நீக்கம்!

Published On:

| By Balaji

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பாஜக பிரமுகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு காரில் ஒரு கும்பல் போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் சென்றது. இதனையடுத்து, டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் திருச்சி மன்னார்புரம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து விசாரித்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் காரில் வந்தவர்கள் திருச்சியை சேர்ந்த சரவணன் மற்றும் மந்திரிமங்களத்தை சேர்ந்த ஆதடையான் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தியதில் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கும்பல் போதைப்பொருளை ஒரு காரில் கடத்தி செல்வதாக தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து செல்போன் டவர் லொகேஷன் அடிப்படையில் பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் பகுதிக்கு நேற்று அதிகாலை நேரத்தில் நேரில் வந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.

போலீசாரின் சோதனையில் அந்த காரில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான 2 கிலோ அபின் இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து 2 கிலோ அபினையும், 2 சொகுசு கார்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பலூரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் மற்றும் அரும்பாவூரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், ஆகிய மூவரையும் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். தற்போது முருகனின் வேலை வைத்து பாஜகவினர் பூஜை செய்து வரும் நிலையில், போதை பொருள் கடத்திவரப்பட்ட காரின் முன் பகுதியில் வேல் இருந்தது.

கைது செய்யப்பட்ட சரவணன், ஆதடையான், அடைக்கலராஜ், ஜெயப்பிரகாஷ், பாலசுப்பிரமணியம் ஆகிய 5 பேரிடமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடத்தல் கும்பலிடமிருந்து பிடிப்பட்ட அபின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதும், இதன் சர்வதேச சந்தை மதிப்பு 15 லட்ச ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அடைக்கலராஜை பாஜகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று (ஆகஸ்ட் 12) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share