கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி ஆரம்பித்த ஊரடங்கு இன்று வரை நீடித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 ஆயிரத்து 248 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 425 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் தற்போது 2 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 லட்சத்து 24 ஆயிரத்து 433 பேர் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். இதுவரை கொரோனா தொற்றால் 19 ஆயிரத்து 693 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு ஆரம்பித்தபோது 600 என்று இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை நிலவரப்படி 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதனை விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள் ஊரடங்கை முறையாக பயன்படுத்தாததுதான் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 6) தனது ட்விட்டர் பக்கத்தில், மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது என ஹாஷ்டாக் வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தொற்று, பணமதிப்பழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல் ஆகிய மத்திய அரசின் திட்டக் கணிப்பு தோல்விகள் ஹார்வர்ட் வர்த்தகப் பள்ளியின் எதிர்கால ஆய்வுகளாக இருக்கும்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “பிஎம் கேர்ஸ் நிதி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையில்லை. பொது மக்களின் உயிரை பணயம் வைப்பது, மக்களின் பணத்தை பயன்படுத்தி தரம் குறைவான பொருட்களை வாங்குவதுதான் அதில் நடைபெறுகிறது” என்று கூறியவர், பிஎம் கேர்ஸ் நிதியில் வாங்கும் வெண்டிலேட்டரை தயாரிக்கும் நிறுவனம், சாப்ட்வேரில் தில்லுமுல்லு செய்து, தவறான செயல்பாட்டை மறைக்கிறது என்று வெளியான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
**எழில்**�,