பாஜக தலித் அரசியலை முன்னெடுக்கிறதா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தமிழக தலைவர் முருகன் பதிலளித்துள்ளார்.
பாஜகவின் மாநிலத் தலைவராக நேற்று முன் தினம் பொறுப்பேற்ற எல்.முருகன், முதல்முறையாக இன்று (மார்ச் 15) கோவைக்குச் சென்றார். அவருக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் நின்றபடி அவரை பாஜக அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சூர்யபிரகாஷ், ஆனந்த் ஆகியோர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகளை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். கோவையில் அமைதி நிலவ வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன் இருந்த தலைவர்கள் செய்யாததை, எதை நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஏற்கனவே பாஜகவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இருந்துள்ளனர். அவர்களின் பாதையில் நான் பயணிப்பேன். பாஜக எடுப்பது அனைத்தும் கூட்டு ஆலோசனையின்படி எடுக்கும் முடிவாகும். அனைத்து பகுதிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்” என்றார்.
உங்களை தலைவராக நியமித்து பாஜக தலித் அரசியலை கையிலெடுக்கிறதா என்ற கேள்விக்கு, “சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். இப்போது, பட்டியலின மக்களிடையே பாஜகவை அதிகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த நான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்வோம்” என்று பதிலளித்தார்.
**எழில்**�,