கடந்த நவம்பர் 5 ஆம் தேதி கேதார்நாத்தில் பிரதமர் மோடி ஆதிசங்கரரின் சிலை திறப்பு மற்றும் சில நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து விழா நடத்தினார். அதை தமிழக பாஜக தமிழகத்திலுள்ள 16 கோயில்களில் எல்.இ.டி.ஸ்க்ரீன் வைத்து மோடியின் பேச்சை ஒளிபரப்பி பாஜகவினருடன் கூட்டமாக அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீரங்கத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ராமேஸ்வரம் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் என்று கோயில்களில் பாஜகவினர் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இதில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அரசியல் ரீதியான கூட்டத்தை அண்ணாமலை நடத்தியது பற்றி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வைணவ செயற்பாட்டாளரும்,ஸ்ரீ ராம பானம் அமைப்பின் தலைவருமான ரங்கராஜ நரசிம்மன் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல்கள் விடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மின்னம்பலத்தில், [கோயில்களை அரசியல் கூடாராமாக்கிய பாஜக:எதிர்த்தவருக்கு கொலை மிரட்டல்](https://www.minnambalam.com/politics/2021/11/12/31/tamilnadu-bjp-anti-hindu-srirangam-temple-annamalai-rangaraja-narasimman) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இன்று ரங்கராஜ நரசிம்மன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,
“5.11.2021 ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர் கட்சிக்காரர்களுடன் சட்டவிரோதமாக கோவிலில் கோவிலுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சி நடத்தியதை குறித்து நான் கொடுத்த புகாருக்கு தமிழக காவல் துறை எனக்கு, என் வீடு தேடி வந்து, இன்று CSR கொடுத்துள்ளது. பல முறை சொல்லி உள்ளேன். CSR கொடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருக்கின்றன. இருப்பினும் அவர்கள் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் பழைய நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை வைத்து இதை செய்து கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்கள் வாதப்படியே அவர்கள் முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கருதி அதற்காக CSR கொடுத்தார்கள் என்றால் 15 நாட்களுக்குள் அந்த முதல் கட்ட விசாரணை முடிந்து FIR தாக்கல் செய்யப்பட வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார். இன்னும் 15 நாட்கள் காப்போம். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்”என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அண்ணாமலை மீது ஆன்லைனில் ரங்கராஜ நரசிம்மன் கொடுத்த புகாருக்கு ஸ்ரீரங்கம் காவல்நிலைய ஆய்வாளர் அறிவழகன் சி.எஸ். ஆர். அதாவது புகாருக்கான ரசீதை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து இன்னும் 15 நாட்களுக்குள் அண்ணாமலை மீது முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்பது சட்ட விதி. அதுவரை பொறுத்துவிட்டு அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர். பதியப்படவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் ரங்கராஜ நரசிம்மன்.
இதற்கிடையே, ‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது விமர்சனம் வைத்தீர்கள் சரி. அதன் அடுத்த கட்டமாக போலீஸுக்கு ஏன் போனீர்கள்?” என்று பாஜகவினர் சிலர் ரங்கராஜ நரசிம்மனுடன் பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன.
**-வேந்தன்**
�,”