கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் கூடாது: அரசு!

Published On:

| By Balaji

பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் கூடாது என்று தமிழக அரசு இன்று (ஜனவரி 4) உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 21 மளிகை பொருட்களை வழங்குகிறது. இத்திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதனிடையே பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கத் தமிழக அரசு ரூ.71.10 கோடி நிதி ஒதுக்கியது. இதற்காகக் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், இதில் இடைத்தரகர்களின் தலையீட்டைத் தடுத்து விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து அதற்கான பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர்.

தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டு, பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதில்,

பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும் (போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் உட்பட).

கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும்.

நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது.

அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்த விதமான புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது.

இந்த வருடம் கரும்பு கொள்முதல் விலை 10% அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிடக் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த விலையையோ அல்லது அதற்குக் குறைவாகவோ விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது.

கரும்பு கொள்முதல் செய்யும்போது, அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாகக் கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.

கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கரும்பின் நுனியிலிருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரும்பு வழங்குவதில் எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கூறிய அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றும்படி தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share