அவமதிப்பு, அடங்காத கோபம்: ஆளுநர் மீது ஸ்டாலின் பாய்ச்சல் பின்னணி!

politics

உதகையில் இன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் நிலையில், பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25) வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம் ), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்ட முடிவை அறிமுகம் செய்தார்.

குஜராத் பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் தெலங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டம் ஆகியவை பல்கலை கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க, தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதுபோன்று கர்நாடக மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்கள் மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும்.

அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திறந்தநிலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் பொன்முடி.

இந்த சட்டமுன் வடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழக அரசின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்க் கல்வி அளிப்பதில் இந்த பல்கலைக் கழகங்கள் வரலாறு சிறப்புமிக்க பணிகளை செய்து வருகின்றன. பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநர் அவர்களும், இணை வேந்தராக உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் செயல்படக்கூடிய நேரத்தில், கொள்கை முடிவை எடுக்கக் கூடிய அரசுக்கு பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிக்கக் கூடிய அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மாநில அரசை கலந்து ஆலோசித்து ஆளுநர் துணை வேந்தர்களை நியமிப்பது மரபாக இருந்து வந்த நிலையில் அண்மை காலமாக இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் நியமனத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு அதிகரித்துள்ளது.

அரசின் கீழ் செயல்படும் பல்கலைகழங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க முடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக் கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மக்கள் ஆட்சியின் தத்துவத்துக்கு துரோகமாக இது இருக்கிறது.

ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007ல் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம், அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத, துணை வேந்தர்கள் நியமனத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது. அதற்கு பூஞ்சி ஆணையம் கூறிய காரணம், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் வழிவகுக்கும். அதோடு மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் அதிகார மோதலுக்கு வித்திடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பூஞ்சி ஆணையத்தின் அறிக்கையை தமிழகம் உட்பட 19 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது. திமுக அரசு என்னுடைய தலைமையில் அமைந்தவுடன் பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரை பற்றி மீண்டும் மாநில அரசின் கருத்தை கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது, அப்போது துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் துணை வேந்தர்கள் நியமனம் எப்படி நடக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் தேடுதல் குழு பரிந்துரைக்கு மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் துணைவேந்தராக மாநில அரசின் ஒப்புதலோடு வேந்தரால் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆகவே பிரதமரின் மாநிலமான குஜராத்தில் உள்ளது போல் தமிழகத்திலும் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட முடிவை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்துள்ளார். பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்கலாம் என்று 2017ல் அதிமுக கருத்து தெரிவித்தது. எனவே இந்த சட்டமுன் வடிவை அதிமுக ஆதரிப்பதில் நெருடல் இருக்காது. இது மாநில அரசின் உரிமை தொடர்புடைய பிரச்சினை, கல்வி உரிமை பிரச்சினை என்பதால் இந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றித் தர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந்த சட்டமுன்வடிவை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது. அதேசமயத்தில் மமக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

உயர்கல்வித்துறை அமைச்சக வட்டாரங்களில் பேசியபோது, “திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே ஆளுநர் நேரடியாக துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பாக அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஸ்டாலின், ‘ஆளுநருடன் எதற்கு மோதல் போக்கு. தகுதியான துணை வேந்தர்களை நியமித்தால் சரிதான்’ என்ற நிலையில் தான் இருந்துள்ளார்.
ஆனால் அடுத்தடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதல்வருக்கும் உயர் கல்வித் துறைக்கும் தெரியாமல் நியமிக்கப்படுவது தொடர்ந்தது. துணைவேந்தர் நியமனங்களை டிவியில் பார்த்து தான் முதல்வரே தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக முதல்வரை கூட அழைக்காமல் தகவல் தெரியப்படுத்தாமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியது முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மாநில அரசை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநருக்கு எதிராக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில், ஆளுநர் அங்கு துணை வேந்தர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில், இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்” என்கிறார்கள்.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.