பிகார் சட்டசபை: இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published On:

| By Balaji

பிகார் சட்டசபை தேர்தலுக்கான 94 தொகுதிகளில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

பிகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல், கடந்த 28ஆம் தேதி நடந்தது. இரண்டாம்கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடக்கிறது. 17 மாவட்டங்களில் அடங்கியுள்ள 94 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்தத் தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50,285 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33,034 பேர். பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16,271 பேர். திருநங்கையர் 980 பேர். 41,362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்கள், 146 பேர் பெண்கள்.

மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், தராலி (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக நான்கு வேட்பாளர்களும் உள்ளனர்.

ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல் மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் இரண்டாம்கட்ட தேர்தலைச் சந்திப்பவர்களில் முக்கிய வேட்பாளர்கள். முதல் மந்திரி நிதிஷ்குமாரின் சொந்த கிராமம் அமைந்துள்ள ஹரானட் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிகாரில், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10ஆம் தேதி நடக்கிறது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share