�ஓபிஎஸ்- இபிஎஸ் யாருக்கு ஆதரவு? அதிமுக மாசெக்களிடம் மின்னம்பலம் ஆய்வு!

politics

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி கூட இருக்கிறது. இந்த செயற்குழுவின் நோக்கம் வர இருக்கிற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பது பற்றி ஆலோசிப்பதாகவும் இருக்கும்.

செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் , திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று முடிவு செய்து பிரகடனப்படுத்திவிட்டார்கள். ஆனால் அதுபோல இப்போது அதிமுகவில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைமை என எல்லாரும் இணைந்து இவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர், இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று முடிவெடுக்கும் நிலையில் இல்லை.

.தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன்னையே 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று மிக கவனமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சில அமைச்சர்கள் மிக வெளிப்படையாக எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறினர். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், தான் முன்னிலைப்படுத்தப்படுவதையே விரும்புகிறார்.

“ஜெயலலிதா இருக்கும்போதே அதிமுக சார்பில் இருமுறை முதல்வர் பதவியில் அமரவைக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். அவர் மறைந்தவுடனும் உடனடியாக ஓ.பன்னீரே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த வகையில் அதிமுகவில் ஜெயலலிதாவால் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டவர் ஓ.பன்னீர்தான். எனவே அவரே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்”என்று பன்னீரின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் மூலமும் சமூக தளங்கள் மூலமும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவின் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரிடமும் மின்னம்பலம் சார்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

**கட்சின்னா யாரு?**

“யார் பொதுச் செயலாளர், யார் முதல்வர் வேட்பாளர்னு முடிவு பண்ண வேண்டியது கட்சிதானங்க. இபிஎஸ்சும், ஓபிஎஸும் அவங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணிட்டா அது கட்சி முடிவுனு ஆயிடுமா? மாவட்டச் செயலாளர்களான நாங்கதானங்க கட்சி. அம்மா இருந்தப்ப துளி சந்தேகம் இல்லாம எல்லாரும் அம்மாவை நம்பினோம். அம்மாதான் முதல்வர், அம்மாதான் பொதுச்செயலாளர்னு தெளிவா இருந்தோம். ஆனா இப்போது குழப்பம் இருக்குறபோது மாவட்டச் செயலாளர்கள்தானே முடிவு செய்யணும்?

அதிமுகங்குறது இங்க இருக்கிற எல்லா மாவட்டச் செயலாளர்களும் சேர்ந்ததுதான். ஒவ்வொரு மாவட்டத்துலயும் கட்சித் தொண்டர்களோட மன ஓட்டத்தை மாவட்டச் செயலாளர்களான நாங்கதான் பிரதிபலிக்கிறோம். அப்படிப் பார்த்தா மாவட்டச் செயலாளர்களோட கருத்துதான் கட்சியோட கருத்து.தொண்டனுடைய கருத்து.

ஆனால், மாவட்டச் செயலாளர்களையே எதுவும் கேட்காம ஓபிஎஸ், இபிஎஸ் ரெண்டு பேரும் பேசி முடிவெடுக்குறதுங்கறது என்ன அர்த்தம்?’ என்று எகிறினார் மூத்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

சரி…அப்படி மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுத்தால் என்ன முடிவெடுப்பார்கள்? தமிழகம் முழுவதும் அதிமுகவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களிடம் இதுபற்றி பேசினோம்.

**ஓபிஎஸ்சின் சமுதாய பலம் என்ன?**

தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாவட்டச் செயலாளர் ஓபிஎஸ் பற்றி ஒரு கேள்வியை நம்மிடம் முன் வைத்தார்.

“அம்மா இருந்தப்ப, சட்டப்படி அவங்க முதல்வரா இருக்க முடியாத நேரத்துல ரெண்டு தடவை ஓபிஎஸ்சை முதல்வராக்கினாங்க. அம்மா இறந்தப்பவும் ஏற்பட்ட அரசியல் சூழல்லயும் அவர்தான் முதல்வரானாரு. எல்லாம் சரிதான். அம்மா இறந்த பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு பிஜேபி பேச்சைக் கேட்டுக்கிட்டு தர்ம யுத்தம் நடத்தினாருல்ல. அப்ப அவர் பின்னாடி போன எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேரு? அவரையும் சேர்த்து 11 பேரு. ஆக அவர் பின்னாடி போனது பத்து பேரு. இதுல இன்னொரு முக்கியமான சேதி இருக்கு. ஓபிஎஸ் பின்னாடி போன எம்.எல்.ஏ.க்கள்ல அவர் சமுதாயத்தைச் சேர்ந்த யாராச்சும் போனாங்களா? அப்படின்னா அவ்வளவுதான் அவர் சமுதாயத்துல அவரோட பலம்.

சரி…முதல்வரா இருந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் ஆரம்பிச்ச பிறகு அதை பாதியிலயே முடிச்சுக்குட்டு அதை விட ஒரு படி இறங்கி துணை முதல்வராகிறதுக்கு ஒப்புக்கிட்டுதானே இணைப்புக்கு சம்மதிச்சாரு.

2019 எம்பி எலக்‌ஷன்ல தேனி தொகுதியில ஓபிஎஸ் சோட மகன் மட்டும் ஜெயிக்குறாரு. அந்த தேனி எம்பி தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதியில நடந்த பெரியகுளம், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல்ல திமுக ஜெயித்தது. இது எப்படி? சட்டமன்றத்துல அதிமுக ஜெயிக்கணும்குற அக்கறையை விட எம்பி தேர்தல்ல நிக்கிற தன் மகன் ஜெயிக்கணும்குறதுதானே ஓபிஎஸ் சுக்கு முக்கியமா இருந்துச்சு.

சட்டமன்றத்துல நடந்த நம்பிக்கை தீர்மானத்துல தன்னோட கட்சியான அதிமுக அரசாங்கத்தை, ரெட்டை இலை சின்னத்துல நின்னு ஜெயிச்சு அம்மா அமைச்ச ஆட்சியை எதிர்த்து ஓட்டுப் போட்டவர்தானே ஓபிஎஸ்? அப்படியாப்பட்டவர்தான் எம்பி தேர்தல்லயும் கட்சியை விட தான் முக்கியம், தன் மகன் முக்கியம்னு செயல்பட்டாரு. இதுமட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தல்லையும் அவர் ஏரியாவுல எத்தனை இடம் ஜெயிச்சிருக்கோம்?

கட்சியை எதிர்த்து சட்டமன்றத்துல ஓட்டுப் போடுவாரு, அப்புறம் எந்தப் பதவி கிடைச்சாலும் பரவாயில்லைனு அரசாங்கத்துல இணைஞ்சுப்பாரு, அப்புறம் தன் மகனை ஜெயிக்க வைப்பாரு, ஆனா கட்சியை கண்டுக்க மாட்டாரு…. கட்சியை எதிர்த்து இத்தனையும் செய்த பன்னீர் இந்த கட்சியோட பொதுச் செயலாளராக வரணும்னா அது எப்படி? அவருக்கு கட்சியில என்ன செல்வாக்கு இருக்கு?”என்று கேள்விக் கணைகளாகத் தொடுத்தவர் தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

**கட்சியா குடும்பமா?**

“ஓபிஎஸ் முன்னாடி முதல்வராக இருந்தபோதும் சரி. இப்ப கடந்த மூணு வருஷமா துணை முதல்வரா இருக்கிறபோதும் சரி. அவர் துறை மூலமா, துணை முதல்வர் பதவி மூலமா கட்சிக்காரங்க யாருக்காவது உதவி பண்ணியிருக்காரா? அவருக்கு வேற ஒண்ணும் வேணாம். அவரோட மகன் ஓபிஆரை மத்திய அமைச்சர் ஆக்கறதுக்கு எடப்பாடி ஒத்துக்கிட்டார்னா போதும். ஆனா இது எடப்பாடி மட்டும் ஒத்துக்குற விஷயமா?

சீனியர்கள் தம்பிதுரை இருக்காங்க, ஓபிஎஸ் சோட தர்மயுத்தம் நடத்துன கே.பி. முனுசாமி இருக்காங்க. தம்பிதுரை எம்ஜிஆர் காலத்து ஆளு. நாடாளுமன்றத்துல துணை சபாநாயகரா இருந்தவர், மத்திய அமைச்சரா இருந்தவர். தான் தோற்றால் கூட டெல்டா பகுதியில கணிசமான எம்.எல்.ஏ.க்களை அதிமுகவுக்கு ஜெயிச்சுக் கொடுத்த வைத்திலிங்கம் இருக்காரு.

இவங்களை எல்லாம் மத்திய அமைச்சர் ஆக்காம தன்னோட பையன் ரவீந்திரநாத்தை ஆக்கணும்குறது மட்டும்தான் ஓபிஎஸ்சோட ஒரே குறிக்கோள் . அதாவது தன்னோட சேர்ந்து தர்மயுத்தம் நடத்துன சீனியரான கே.பி.முனுசாமிக்கு கொடுக்கணும்னு சொன்னா கூட அதுல அர்த்தம் இருக்கு. ஆனா, அவருக்குக் கூட கொடுக்காம 42 வயசே ஆன ரவீந்திரநாத்துக்குதான் மத்திய அமைச்சர் பதவினு ஓபிஎஸ் தெளிவா இருக்குறாருன்னா, அவருக்கு கட்சியை விட தன் குடும்பம்தான் முக்கியம்னு இன்னும் தெளிவா தெரியுது. இதுமட்டுமில்ல…தன்னோட இன்னொரு மகன் ஜெயபிரதீபுக்கு அசெம்பிளி சீட் வேணுமாம். இப்படிப்பட்டவர்கிட்ட அதிமுகவோட பொதுச் செயலாளர் பதவி போகலாமா?” என்று கோபமாகவே கேட்டார் அந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த மாசெ.

**கட்சியினருக்கு செய்வது எடப்பாடிதான்**

மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்..ஏவும் மாவட்டச் செயலாளருமான அவரிடம் மின்னம்பலம் சார்பாக இபிஎஸ், ஓபிஎஸ் யாருக்கு உங்க ஆதரவு என்று கேட்டோம்.

“ ஓபிஎஸ் கிட்ட இதுவரை மூணு முறை முதல்வர் பதவி வந்திருக்கு. இப்ப கூட சிஎம்டிஏ போன்ற செல்வச் செழிப்பான துறைய வச்சிருக்காரு. ஆனா கட்சிக்காரங்களுக்கு செய்யணும்குற அடிப்படை அறமே அவர்கிட்ட இல்லை. இப்படி சொல்றேனு தப்பா நினைக்கக் கூடாது. உள்ளதைதான் சொல்றேன்.

ஆனா எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை மந்திரி ஆனபிறகுதான் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கெல்லாம் வரவேண்டியது எல்லாம் வந்தது. இப்படியெல்லாம் கட்சிக்காரங்களுக்கு செய்ய முடியும்னு எடப்பாடிக்கிட்டே இருந்து மத்தவங்க பாடம் படிக்கணும். கட்சிக்காரங்களுக்கு இதுதான் முக்கியம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மட்டுமில்ல… எதிர்க்கட்சி எம். எல்.ஏ.க்களுக்கும் போகுதா இல்லியானு அவங்களையே கேளுங்க. இப்படி தன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்ல.. வேற கட்சி எம்.எல்.ஏ.க்களோட நிலைமையையும் ப்ராக்டிக்கலா புரிஞ்சு வச்சிக்கிட்டவர் எடப்பாடி.

தன் குடும்பமா, கட்சியானு கேட்டா குடும்பம்தான் முக்கியம்னு நடந்துக்குற ஓபிஎஸ் எங்கே…தன் கட்சி நிர்வாகி மட்டுமில்ல அடுத்த கட்சி எம்.எல்.ஏ.வும் தன் ஆட்சியில நல்லா இருக்கணும்னு நினைக்கிற இபிஎஸ் எங்கே….. இப்ப நான் யாரை ஆதரிக்கறதுனு நீங்களே சொல்லுங்க” என்று நம்மைப் பார்த்து சிரித்தார்.

**ஆட்சியை நிலை நிறுத்தியது ஓபிஎஸ்**

சென்னையை ஒட்டியுள்ள அந்த மாசெவிடம் இந்த பல்ஸ் பற்றி பேசினோம்.

“ஓபிஎஸ் பற்றி ஆயிரம் விமர்சனம் சொல்லட்டும் சார். தினகரன் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டு எடப்பாடிக்கு பொழுது போனா பொழுது வந்தா குடைச்சல் கொடுத்துக்கிட்டிருந்த நிலைமையில தினகரனை எதிர்த்துக்கிட்டு சுதந்திரமான ஒரு ஆட்சியை இன்னிக்கு எடப்பாடி நடத்த முடியுதுன்னா அது யாரால சார். ஓபிஎஸ் சாலதானே? அன்னிக்கு சசிகலா எதிர்ப்பால எந்த ஆட்சியை எதிர்த்து ஓட்டு போட்டாரோ அதே ஆட்சியை இன்னிக்கு கடைசி வரைக்கும் காப்பாத்தறது ஓபிஎஸ்தானே சார்” என்கிறார்.

**நம்பகத் தன்மை இல்லாத பன்னீர்**

பன்னீரை இதுவரை ஆதரித்து வந்தவரும் இப்போது எடப்பாடியை ஆதரிப்பவருமான அந்த தென் மாவட்ட மாசெ ஒருவரிடம் ஏன் இந்த மாற்றம் என்று கேட்டோம்.

“பன்னீரை நம்பிதான் சசிகலாவை எதிர்த்தோம். பன்னீரை நம்பிதான் தினகரனை எதிர்த்தோம். ஆனால் வெளியில் அவங்களை கடுமையா தாக்கிட்டு யாருக்கும் தெரியாம தினகரனை போய் பன்னீர் பார்த்திருக்கிறார். இதை தினகரனே வெளிப்படையாய் சொன்னபிறகுதான் எங்களுக்கே தெரியும். உடனே வேறவழி தெரியாம கட்சியைக் காப்பாத்த தினகரனை சந்தித்தேன்னு சொன்னாரு பன்னீரு. இப்படிப்பட்ட நம்பகத் தன்மை இல்லாத பன்னீரிடம் நிர்வாகிகள் எப்படி ஒட்டுவார்கள்? பன்னீரு சொல்றது ஒண்ணு செய்யுறது ஒண்ணு என்பதாலதான் அவரை பல நிர்வாகிகள் ஆதரிக்க முடியலை” என்கிறார் வேதனையாய்.

**பன்னீரை நம்பியதன் பலன்**

வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட அளவிலான நிர்வாகி இதுபற்றி நம்மிடம்,

“2017பிப்ரவரியில நான் ஓபிஎஸ் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சு போனேன். பல லட்சங்களை அவருக்காக செலவு பண்ணேன். ஆனா அணிகள் இணைப்பு முடிஞ்சு அவர் துணை முதல்வர் ஆன பிறகு நான் அவரை பாக்க பல முறை போயும் என்னால முடியல. என்கூட இருக்கும் தொண்டர்களும் நிர்வாகிகளும் என்னை ஏமாளினு திட்டினாங்க. ஏன்…ஓபிஎஸ் சை முதல்முதலா ஆதரிச்ச அன்றைய விழுப்புரம் மாவட்டச் செயலாளர் லட்சுமணனும் என் நண்பர்தான். இன்னிக்கு அவர் கதி என்னாச்சு? உங்களால எனக்கு எதுவுமே ஆகலைனு ஓபிஎஸ் சை நேரா பார்த்து சொல்லிட்டுதான் அவர் திமுகவுக்குப் போனாரு.

இப்படிப்பட்ட நிலைமையில கட்சியோட நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறதுங்குறது இயல்பா இயற்கையா நடக்கும். இதுல எந்தத் திணிப்போ, வற்புறுத்தலோ இருக்காது. அதிகாரம் இல்லாதபோது ஆதரவா பேசணும். அதிகாரம் இருக்கும்போது ஆதரவா செய்யணும் இதுதான் சார் அரசியல்.

ஆனால், ஓபிஎஸ் அதிகாரம் இருக்கும்போது பார்க்கக் கூட மாட்டாரு. அதிகாரம் இல்லாதபோது பேசக் கூட மாட்டாரு. ஆனா எடப்பாடி அப்படி இல்லை. அதிகாரம் இருக்கும்போது தன்னால முடிஞ்ச அளவுக்கு கட்சித் தொண்டனுக்கும் நிர்வாகிக்கும் செய்ய நினைக்குறாரு. இதுதான் என் முடிவு” என்கிறார்.

**பணத்தால் சாதிக்கிறாரா எடப்பாடி?**

வெறும் பணம் கொடுத்துவிட்டால் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வளைத்துவிட முடியுமா சார் என்று எடப்பாடியை ஆதரிப்பதாக நம்மிடம் சொன்ன ஒரு மாசெவிடம் கேட்டோம்.

“சார் இன்னிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் வீட்டை விட்டு கெளம்புறார்னா கையில அம்பதாயிரம் ரூபாய் இருக்கணும். நல்லது கெட்டதுனு பத்து வீட்டுக்குப் போனாலே இது சரியா போயிடும். அப்புறம் பார்க்குற இடத்துல சில பேர் உதவிகேட்பாங்க. அவங்களுக்கு செய்யணும். இதுக்கெல்லாம் அடிப்படை பணம்தான் சார். அதனால பணத்தை நாம எப்படி பயன்படுத்துறோம்னு இருக்கு. இப்படிதான் பாக்கணும். பணம்குறது நிர்வாகிகளுக்கு கொடுப்பதல்ல. நிர்வாகிகள் மூலமா கட்சித் தொண்டனுக்கு போகணும்; இதுதான் எம்ஜிஆர் பாலிசி, அம்மா பாலிசி. இன்னிக்கு எடப்பாடி பாலிசியும் இதுதான்.

அதேபோல ஒவ்வொரு மாவட்டத்துல கட்சிக்கு உழைச்சவங்க, சீனியர்னு எல்லாரையும் தேடிப் போய் பேசுறாரு எடப்பாடி. இதுதான் வளர்ச்சிக்கு அடையாளம். ஆனா ஓபிஎஸ் கிட்ட இந்த அனுசரனையும், அக்கறையும் இல்லாமப் போனதாலதான் அவரை நம்பிவந்த பலபேரு திசைமாறுறதுக்கு காரணமா இருக்கு” என்கிறார் ஓப்பனாக.

**அமைச்சர்களும் எடப்பாடி பக்கமே!**

வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாசெ நம்மிடம் ஒரு போட்டோவைக் காட்டிப் பேசினார்.

“2016 இல் அம்மா அமைத்த அமைச்சரவையை இன்னும் அப்படியே கொண்டு போயிட்டிருக்கார் எடப்பாடி பழனிசாமி. இந்த அமைச்சரவையில இருக்குற மெஜாரிட்டி அமைச்சர்கள் எடப்பாடி மேல நம்பிக்கையா இருக்காங்க. நம்பிக்கை மட்டுமில்ல, எடப்பாடியோட ஆளுமைதான் தேர்தலுக்குப் பயன்படும்னு நினைக்கிறாங்க.

சமீபத்துல முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் போனபோது, அம்மாவட்ட அமைச்சர் எம்.சி. சம்பத், முதல்வரோட காரைத் தொட்டு வணக்கம் வச்சதை பாத்திருப்போம். அவர் பயத்தால கும்பிடல, எடப்பாடி மேல உள்ள பாசத்தாலயும், நம்பிக்கையாலயும் கும்பிடுறாரு. அதனால அமைச்சர்களும் எடப்பாடி பக்கம்தான் மெஜாரிட்டியா இருக்காங்க அப்படிங்குறதுக்கு கடலூர் சம்பவமே ஒரு சாட்சி” என்கிறார் எடப்பாடியை சம்பத் வணங்கும் புகைப்படத்தைக் காட்டி.

இன்னமும் நாம் பேசிய மாசெக்கள் பலரும் ஓபிஎஸ், எடப்பாடி ஒப்பீடு பற்றி பேசிவிட்டு நடைமுறை ரீதியாக இபிஎஸ் பக்கமே நிற்கிறார்கள். 28 ஆம் தேதி நடக்கும் செயற்குழுவில் இது எதிரொலிக்கக் கூடும்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *