கத்திரிக்காய் ஒரு கிலோ 170 ரூபாய், கேரட் ஒரு கிலோ 220 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 150 ரூபாய், தக்காளி கிலோ 290 ரூபாய்… பால் ஒரு லிட்டர் 200 ரூபாய்க்கு மேல்… இந்த விலைவாசி இந்தியாவில் இல்லை – இலங்கையில்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் இறங்கி வீதிகளில் திரண்டுவிட்டனர். ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதற்கே மக்களுக்கு சிரமமாக இருக்கிறது என்று ராஜபக்ஷே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்தான் இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்ஷேவின் சகோதரரும் அந்நாட்டு நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷே அவசரமாக டெல்லி வந்து காத்திருந்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (டிசம்பர் 1) மாலை சந்தித்திருக்கிறார்.
நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு பசில் ராஜபக்ஷே மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இலங்கையின் கருவூலச் செயலர் எஸ்.ஆர். ஆட்டிகல, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் பல அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது இருந்திருக்கிறார்கள்.
கொழும்பு துறைமுக முனையத்தை மேம்பாடு செய்வதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுடன் செய்துகொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை ஒருதலைபட்சமாக ரத்து செய்தது. சீனாவின் அழுத்தமே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இந்த ஒப்பந்த முறிவால் இலங்கைக்கும் பெரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது.
இதற்கிடையே நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ரசாயன உரங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக இயற்கை விவசாயத்துக்கு திரும்ப முடியாமல் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. காய்கறிகள், பால் விலை மிகக் கடுமையாக உயர்ந்துகொண்டே இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பால் , சமையல் எரிவாயு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 7.4% வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியான நிலையில்தான் இந்தியாவிடம் உதவி கேட்டு டெல்லிக்கு வந்திருக்கிறார் பசில் ராஜபக்ஷே. இந்தியாவின் நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வகையில் உதவிகளைக் கேட்டிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் 1.1 பில்லியன் டாலர் நாணய பரிமாற்றத்திற்காக குறைந்தபட்சம் ஒரு கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்துள்ளதாகவும், இலங்கையின் கோரிக்கையை ஏற்குமா என்பதை டெல்லி இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-வேந்தன்**
�,