கமல் கட்சியில் அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

politics

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடவடிக்கை எடுத்து வந்தார். ஆனால், ஆர். மகேந்திரன், முருகானந்தம், சந்தோஷ் பாபு, பத்மப்ரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர்.

அவர்கள் வரிசையில் இன்று (மே 20) கட்சியின் பொதுச் செயலாளரான சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கமலுக்கு எழுதிய கடிதத்தில், “2019-ல்‌ மக்கள்‌ நீதி மய்யத்திலிருந்து விலகிப் போனாலும்‌. தமிழகத்தில்‌ உங்களாலும்‌ மக்கள்‌ நீதி மய்யத்தாலும்‌ மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்‌ என்ற நம்பிக்கையில்‌ தான்‌ நான்‌ மீண்டும்‌ இணைந்தேன்‌. மக்கள்‌ இடத்திலும்‌ அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும்‌ மிக அதிகமாக இருந்தது.

கடந்த நவம்பர்‌ – டிசம்பர்‌ மாதங்களில்‌ கட்சியின்‌ நடவடிக்கைகளாலும்‌. உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தாலும்‌ மக்களிடையே மய்யத்தின்‌ மீதான வரவேற்பும்‌, நம்பிக்கையும்‌ அதிகரித்ததை நான்‌ கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து, மய்யத்திற்கு ‘டார்ச்லைட்‌’ சின்னம்‌ மீண்டும்‌ கிடைத்த போதும்‌, நடிகர் ரஜினிகாந்த்‌ அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த போதும்‌, மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ மீதான அந்த நம்பிக்கையும்‌ எதிர்பார்ப்பும்‌ மேலும்‌ பிரகாசமானது.

ஆனால்‌, இன்று நமக்கான வாய்ப்புகளை நாம்‌ இழந்துவிட்டோம்‌. எதிர்க்கட்சியில்‌ அமரவேண்டிய அத்தனை தகுதிகளும்‌ நமக்கு இருந்த போதும்‌, ஒரு தொகுதியில்‌ கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்?

உங்களுடைய அரசியல்‌ ஆலோசகர்களும்‌ அவர்களுடைய தவறான வழிநடத்தலும்‌ தான்‌ காரணம்‌. ஒரு தொகுதியில்‌, வெற்றி பெற்றால்‌ போதும்‌ என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும்‌ செயல்பாடுகளும்‌ தான்‌, மக்களிடையே இருந்த நம்‌ மீதான நம்பிக்கையையும்‌, எதிர்பார்ப்பையும்‌ தகர்த்து விட்டது.

நமது தோல்விக்கான காரணங்களையும்‌, காரணிகளையும்‌ இதற்கு முன்‌ விலகிய பொறுப்பாளர்கள்‌ உங்கள்‌ முன்னும்‌, ஊடகங்கள்‌ முன்னும்‌ வைத்துவிட்டார்கள்‌. அவர்கள்‌ முன்வைத்த காரணங்களில்‌ உண்மை இல்லாமல்‌ இல்லை என்பது நீங்களும்‌ அறிவீர்கள்‌. புதிதாக நான்‌ சொல்வதற்கு ஒன்றும்‌ இல்லை.

வரலாறு படைப்பவர்களாக இருக்கவேண்டிய நாம்‌, வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமே என்கிற கோபமும்‌, ஆதங்கமும்‌ எனக்கு நிறைய உண்டு.

தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை விடவும்‌, மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்‌ பாதையில்‌ பயணிக்க விரும்புகிறேன்‌. ஆகவே, மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ என்ற நிலையிலிருந்து உடனடியாக விலகுகிறேன்‌” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *