தேசிய அளவிலான பிரச்சினைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பரவலை கட்டுப்படுத்துவதற்கிடையில், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளிட்டவையால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்தியாவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது. அந்த வழக்கு மீதான விசாரணை இன்று(ஏப்ரல் 27) நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.
அப்போது, ”ஆக்சிஜன் உள்ளிட்ட விவகாரங்களை மாநில உயர் நீதிமன்றங்கள் சிறப்பாக கண்காணித்து விசாரித்து வருகின்றன. இந்த விவகாரங்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதையே நாங்கள் விரும்புகிறோம். இருப்பினும், நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது தேசிய பிரச்சினை. அதனால், பிரிவு 226 இன் கீழ் உயர்நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை விசாரிப்பதில் நாங்கள் உதவியாக இருக்கிறோம். தேசிய அளவிலான பிரச்சினைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுகின்றன என தெரிவித்தார்.
மத்திய அரசிடம், ராணுவத்திற்கான ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் எல்லாம் இருக்கக்கூடிய நிலையில் அவை எல்லாம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கொரனோ இரண்டாம் அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், ஆக்சிஜன் தயாரிப்பு விநியோகம் மாநில அரசுகளுக்கு தேவைப்படும் அளவு அதனை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யும் முறை, படுக்கை வசதிகள் உள்ளிட்டவை மருத்துவமனைகளில் எந்த நிலைமைகளில் உள்ளது, ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் எவ்வளவு கையிருப்பில் உள்ளது, தடுப்பூசிக்கான கொள்முதல் விலை மற்றும் விநியோக விலை உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**வினிதா**
.�,