சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவின் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன. 2016 சட்டமன்றத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, 5 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.
2021 சட்டமன்றத் தேர்தல் ஜுரம் தற்போதே தமிழகத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக பாஜகவில் சமீபத்தில் இணைந்து மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்ட வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 12) செய்தியாளர்களிடம் பேசிய துரைசாமி, தமிழகத்தில் அதிமுக vs திமுக என்று இருந்தது, கு.க.செல்வம் பாஜகவில் இணைந்த பிறகு பாஜக vs திமுக என்ற நிலைக்கு மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமையுமா அல்லது அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்குமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “எங்களை யார் அனுசரித்துச் செல்கிறார்களோ, நாங்கள் யாரை ஆதரிக்கிறோமோ அந்த கூட்டணி தமிழகத்தில் வெல்லும். பாஜக தேசிய கட்சி என்பதால் நாங்கள்தான் கூட்டணிக்கு தலைமை வகிப்போம்” என்று பதிலளித்தார்.
அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என்றும், 2021-ம் ஆண்டு சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள் என்றும் பாஜக மாநில தலைவர் முருகன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், வி.பி.துரைசாமியின் இந்த கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற பாஜக தலைமையின் எண்ணத்தைத்தான் துரைசாமி வெளிப்படுத்தினாரா அல்லது அவருடைய தனிப்பட்ட கருத்தா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
**எழில்**�,