கட்டாய மதமாற்றம்-மாணவி உயிரிழப்பு: நீதி கேட்கும் அண்ணாமலை!

Published On:

| By Balaji

அரியலூரில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு பள்ளிக்கூடம் தொடர்ந்து வறுபுறுத்தி சித்ரவதை செய்ததால் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளியான தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி லாவண்யா தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். அதனால், விடுதி வார்டன் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால், விடுதி வார்டன், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

வீடு திரும்பிய லாவண்யா மீண்டும் ஜனவரி 15 அன்று தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவியின் நுரையீரல் கிட்டத்தட்ட 85% பாதிக்கப்பட்டுள்ளதையும், சிறுநீரகமும் செயலிழந்ததையும் கண்டு, மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாக மாணவி கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் மாணவியிடம் விசாரணை நடத்திய போலீசார், புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்.

இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் மாணவி கொடுத்த கடைசி வாக்குமூலம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், என் பெயர் லாவண்யா. என் அப்பா பெயர் முருகானந்தம். சிஸ்டர் என் முன்னிலையில் என் பெற்றோரிடம் என்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், மேல் படிப்புக்கு உதவுவோம் என்று கூறினர். நான் ஏற்காததால், என்னை திட்டிக்கொண்டே இருந்தார்கள்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில்,”ஏழை விவசாயி மகள் லாவண்யா(17), அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

மதமாற்றம் தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share