மூத்த அரசியல்வாதியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பாரத் ரத்னா பிரணாப் முகர்ஜி இன்று (ஆகஸ்டு 31) மாலை காலமானார். மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அவருக்கு வயது 84.
டெல்லி ராணுவ மருத்துவமனையில் சில வாரங்களாகவே சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜியின் மரணத்தை அவரது மகன் அபிஜித் முகர்ஜி இன்று மாலை ட்விட் செய்தார்.
**“மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்து வழிபாடுகள், துவாக்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவற்றையும் தாண்டி… என் தந்தை பிரணாப் முகர்ஜி இன்று மாலை காலமானார்** என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அபிஜித் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்டு 10 ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படட்து. அன்று தனது ட்விட்டரில் பிரணாப் இதை தெரிவித்து தன்னோடு கடந்த சில நாட்களில் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தி சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். மறுநாள் ஆகஸ்டு 11 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மூளை ரத்த நாளங்களில் அடைப்பு நீக்கப்பட்டாலும், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி உடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆகஸ்டு 13 ஆம் தேதியே பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்குச் சென்றதாக ராணுவ மருத்துவமனை அறிவித்தது.
அப்போதிலிருந்து இரு வாரங்களாக பிரணாப்பின் உடல் நிலையில் முன்னேற்றமும், பின்னடைவும் ஏற்பட்ட நிலையில் இன்று காலை, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவித்தது. அவர் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் அதிர்ச்சியில் சிக்கியதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்தது.
**செப்டிக் அதிர்ச்சி என்ற மருத்துவ சொல்லாடலுக்கு பொருள் என்ன என விசாரிக்கையில், “இதயம், மூளை மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். இரத்த அழுத்தம் வேகமாக சரியும். அப்போது சுவாச அல்லது இதய செயலிழப்பு, பக்கவாதம், பிற உறுப்புகளின் செயலிழப்பு மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும்” என்று கூறுகிறார்கள் மருத்துவ வட்டாரத்தில்.**
இந்திரா காலத்தில் இருந்தே காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார். 2019 ஆகஸ்டு 8 ஆம் தேதி பிரணாப்புக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. சரியாக ஒரு வருடம் கழித்து மருத்துவமனை சென்ற அவர் குணமடையாமல் காலமாகிவிட்டார்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “நான் பிரதமராக டெல்லியை அடைந்தபோது டெல்லி எனக்குப் புதிது. என் முதல் நாளில் இருந்து எனக்கு பல ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கொடுத்தவர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். தந்தையை இழந்து தவிப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
**-வேந்தன்**�,