தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டின் முன்பு இன்று (ஜனவரி 3) காலை முதலே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 30 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் நடந்திருக்கிறது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சொல்லித்தான் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், சென்னை பசுமை வழிச் சாலையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை நோக்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இன்று (ஜனவரி 3)மின்னம்பலத்தின் காலை 7 மணி பதிப்பில் [மது பார்கள் மாஸ்டர் பிளான்: மூர்ச்சையில் திமுக மாசெக்கள்](https://minnambalam.com/politics/2022/01/03/10/tasmac-bars-tender-dmk-partymen-shock-all-bars-one-network-sendhilbalaji)
என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் தமிழக டாஸ்மாக் மது பான பார்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று அல்லது ஒரு சில நிறுவனங்களின் கைக்கு செல்வது பற்றிய மாஸ்டர் பிளான் தகவலை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் தற்போது பார் உரிமம் எடுத்து நடத்தி வரும் பார் உரிமையாளர்கள் தங்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா ஊரடங்கால் எந்த லாபமும் இல்லை என்றும், அதனால் தங்களுகே மீண்டும் பார் உரிமத்தை கொடுக்கும்படியும் கேட்டு அமைச்சர் வீட்டு முன் போராட்டத்தில் உள்ளார்கள்.
’பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா?’, ‘திருப்பதி பாலாஜியை மிஞ்சிய செந்தில்பாலாஜி’, ‘பார் தொழிலை நம்பி வாழும் 3 லட்சம் தொழிலாளர்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் முதல்வரே’ என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி இன்று காலை முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சிலர் நீதிமன்றம் சென்றிருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்குமாறு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உத்தரவிடுமாறு இவர்கள் முதல்வருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
“ஒருபக்கம் திமுகவினர் தங்களுக்கு பார் உரிமம் கிடைக்கவில்லையே என்ற குமுறலிலும், புழுக்கத்திலும் இருக்கிறார்கள். அவர்களால் இப்படி வெளியே வந்து தங்கள் ஆட்சியில் இருக்கும் அமைச்சரையே எதிர்த்து போராட முடியவில்லை. அதேநேரம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பார் எடுத்து நடத்திய பார் உரிமையாளர்கள்தான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினர் கை பிசைந்துகொண்டிருக்க, தற்போதைய பார் உரிமையாளர்கள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்பதில் இருந்தே இவர்களைத் தாண்டி இன்னொரு கைக்கு பார்கள் போகப் போகின்றன என்பது தெரிகிறது. அதுதான் மின்னம்பலம் குறிப்பிட்ட மாஸ்டர் பிளான்” என்கிறார்கள் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர்.
**-வேந்தன்**
�,”