xவங்கி ஊழியர்கள் போராட்டம்: எவ்வளவு பாதிப்பு?

Published On:

| By Balaji

வங்கி ஊழியர்களின் முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தினால் இந்தியா முழுவதும் ரூ.37,200 கோடி மதிப்பிலான 39 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளது.

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குதலைக் கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தது. அதன்படி, வங்கி ஊழியர்கள் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது.

தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 500 பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை. போராட்டத்தினால் கிளை மேலாளர் பொறுப்பில் உள்ள வங்கிகள் மூடப்பட்டன. கிளை மேலாளர் பதவிக்கு மேல் உயர் பதவிகளை கொண்ட வங்கி கிளைகள் வழக்கம் போல் செயல்பட்டாலும், பணியாளர்கள் வேலைக்கு வராததால் வங்கி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒரு சிலரே பணிக்கு வந்தனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாததால், பொதுமக்கள், தொழில்முனைவோர்,வணிகர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். வங்கி ஊழியர்கள் போராட்டம் நடைபெறுவது தெரியாமல் சிலருக்கு வங்கிகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

முதல்நாள் போராட்ட முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம்,”பொதுத் துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றோம். எதற்காக இந்தபோராட்டம் நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்தியா சுதந்திரம் அடைவதற்காக 1946 ஆம் ஆண்டுக்கு முன்பு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக போராடினார்கள். அதுபோன்று வங்கித் துறை என்று எடுத்துக் கொண்டால் 1960-69 வரை நடத்திய போராட்டம் காரணமாக நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, வங்கிகள் பொது உடைமையாக்கப்பட்டன.

தற்போது 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதை எதிர்த்துதான் மீண்டும் ஒரு சரித்திர போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

மக்களின் சேமிப்பு காவல்நிலையமாக வங்கிகள் செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்த்து விட்டால் பொதுமக்களின் சேமிப்புக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. வங்கிகளை தனியார்மயமாக்குவதால் பொதுமக்கள் மற்றும் வங்கியில் பணிபுரிவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுபவர்கள். நாட்டையும், வங்கிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இரண்டு நாள் ஊதியத்தை இழந்து போராடி கொண்டிருக்கிறோம்.

நமது சகோதரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் எங்கோ காப்பி அடித்த திருக்குறளை பேசுவார். நானும் திருக்குறள் சொல்கிறேன்.

’நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு’

நாட்டுக்காக உழைப்பவர்களின் மனம் கோணாமல் பார்த்து கொள்வதுதான் ஒரு நாட்டு தலைவரின் தலையாய கடமை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அதனால் எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் மேலும் தீவிரமடையும்” என்று கூறினார்.

வங்கி ஊழியர்களின் போராட்டத்தினால் சென்னையில் மட்டும் 5½ லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன்மூலம் ரூ.5 ஆயிரத்து 400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மும்பை, டெல்லி, சென்னை ஆகிய 3 மண்டலங்களில் சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான 39 லட்சம் காசோலைகள் முடங்கியதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share