ரம்மி, லூடோ விளையாட்டுகளைத் தடை செய்யுங்கள்: ஓபிஎஸ்

politics

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இந்த சட்டத்தை ரத்து செய்தன. இதனால் மீண்டும் ஆன்லைன் விளையாட்டுகளால் இளைஞர்கள் தங்களது பணத்தை இழந்து பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்தசூழலில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவதாகவும், ஆன்லைன் விளையாட்டில் வெற்றி அடைபவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக விளையாட்டுத் துறையினரும், திரைப்படத் துறையினரும் விளம்பரம் செய்வதன் காரணமாக இளைஞர்கள் இதில் நாட்டம் செலுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த விளையாட்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 1968ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி இந்த ஆன்லைன் விளையாட்டு சூதாட்டம் அல்ல, திறமையை வளர்க்கும் விளையாட்டு என்று மேற்படி விளையாட்டினை நடத்தும் நிறுவனங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது திறன் விளையாட்டாக இருந்தால், இதில் உள்ள அபாயங்கள் குறித்து விளம்பரத்தில் ஏன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது?

இந்தநிலைமை தொடர்ந்தால், இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பினைத் தேடுவதிலும் நாட்டம் செலுத்துவதை தவிர்த்து, இதுபோன்ற அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான். இது போன்ற விளையாட்டு மிகவும் ஆபத்தானது.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆன்லைன் மூலம் விளையாடப்படும் பேன்டசி, லூடோ, போக்கர், ரம்மி, கால்பிரேக் உள்ளிட்டவற்றிற்குத் தடை விதிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரியச் சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *