பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் பாக்யராஜ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு வீடியோ மூலம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்த நூலை வெளியிட்டார். அவரிடமிருந்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், “எப்படி சென்றாலும் செயல்பட்டாலும் பிரதமர் மீது விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள, பிரதமருக்கு நான் ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் பண்றவங்க எல்லாருமே மூன்று மாசம் குறைப் பிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகோங்க. ஏன் மூன்று மாசம்னு சொல்றேன்னா நான்காவது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். ஐந்தாவது மாசம்தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் மூன்றாவது மாசமே பிறந்த குறைப் பிரசவக் குழந்தைனு சொல்றேன்.
இப்படியானவங்க நல்லதை அவங்களும் பேச மாட்டாங்க, நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்க மாட்டாங்க” என்று பேசியிருந்தார்
இந்த பேச்சுக்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், பாக்யராஜுக்கு “மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி, அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா?” என்று கேள்வியெழுப்பினார். மேலும், அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் சொல்லலாமா என்றும், ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறித்து பேசி அரசியல் காண முயற்சிப்பதா என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பலரும் பாக்யராஜுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த நிலையில், மாலையில் இயக்குநர் பாக்யராஜ் வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் பாஜக கட்சியில் இல்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் என்னுடைய பேச்சு தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. கிராமத்தில் ஒரு மாதம், இரண்டு மாதம் முன்பே பிறக்கும் குழந்தையை குறைப் பிரசவம் என்பார்கள். அந்தக் கோணத்தில்தான் பேசினேன். எப்போதும் மாற்றுத்திறனாளிகளுடன் அக்கறையுடன்தான் இருக்கிறேன். என்றும் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பேச்சு தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு மன்னிப்பு கோருகிறேன். தமிழ்நாடு, தமிழ் சினிமா என்று தான் வளர்ந்து வருகிறேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜீவா கருத்துகளை உள் வாங்கியவன். அதை தான் சினிமாவில் வெளிப்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**
tசர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்
+1
+1
+1
+1
+1
+1
+1