ஒரு பக்ரீத்: பன்னீர்-எடப்பாடி இரு வாழ்த்து!

Published On:

| By Guru Krishna Hari

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் எனவும், ஈபிஎஸ் தலைமைக் கழக நிலையச் செயலாளர் எனவும் குறிப்பிட்டு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அதன் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்குக்கும் ஜூலை 11ம் தேதியே தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், இஸ்லாமிய மக்களின் திருநாளான பக்ரீத் நாளை (ஜூலை 10) கொண்டாடப்படுகிறது. அது சம்பந்தமாக, அதிமுகவின் இருதுருவங்களாக நிற்கும் ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தனித்தனியாக தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாகவே அவர்கள் இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்டு வருகிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து, இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து என சமீபகாலமாக அவர்கள், இருவரும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக அவர்கள் இருவரும் பதவியேற்றபிறகு, திருநாள் மற்றும் இதர செய்திகளுக்கு அவர்கள் இருவருமே ஒன்றாக கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால், ஒற்றைத் தலைமை விவகாரம் எடுத்தபிறகு, இருவரும் தனித்தனி திசையில் பயணித்துவருகின்றனர். 

இந்தச் சூழ்நிலையில் இன்று கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகைக்கு, ஓபிஎஸ், தன்னுடைய லெட்டர்பேடில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருப்பார்கள் என்ற உயரிய தத்துவத்தைப் பறைசாற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈபிஎஸ்ஸும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய லெட்டர்பேடில் தலைமைக் கழக நிலையச் செயலாளர் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத்தை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  

அதிமுக சீனியர்களோ, “ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடந்து முடிந்தாலும் கூட ஓ.பன்னீர் தேர்தல் ஆணையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் செல்வார். எனவே ஒற்றைத் தலைமை என்று எடப்பாடி பதவியேற்றால் கூட இரட்டை வாழ்த்து, இரட்டை அறிக்கை தொடரத்தான் செய்யும்” என்கிறார்கள்.

ஜெ,பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share