போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர்பாபாவின் கேளம்பாக்கம் பள்ளி வளாகத்தில் நேற்று (ஜூன் 18) காலை சோதனையைத் தொடங்கினார்கள் சிபிசிஐடி குழுவினர்.
சிவசங்கர் பாபாவுக்காக மாணவிகளை உடலளவிலும், மனதளவிலும் தயார் செய்து வந்த சுஷ்மிதா என்ற பெண்ணின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளியின் பழைய மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் அவரையும் போலீஸார் தேடி வந்தனர். கேளம்பாக்கம் பள்ளி வளாகத்துக்குள்ளேயே சிவசங்கர் பாபாவுக்கென தனி சொகுசு பங்களா இருக்கிறது. இந்த பங்களாவுக்கு வெளியே சிஷ்யர்களுக்கும், சிஷ்யைகளுக்குமான தனித்தனி வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு வீட்டில்தான் சுஷ்மிதா நேற்று போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
யார் இந்த சுஷ்மிதா? இவர் இங்கே எப்படி வந்தார்?
சுஷ்மிதாவுக்கு இப்போது 32 வயது. இந்த பள்ளியில் படிப்பதற்காக தன் பெற்றோரால் மாணவியாக சேர்க்கப்பட்டார் சுஷ்மிதா. பள்ளியில் படிக்கும்போதே பாபாவின் மீது பக்திகொண்டு பள்ளி நிர்வாகத்தின் கட்டளைகளை சிரமேற்கொண்டு வந்தார் சுஷ்மிதா. அதனால் பாபாவுக்கு சுஷ்மிதா மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது.
பள்ளிப் படிப்பு முடித்ததும் கல்லூரிக்குச் சென்றார் சுஷ்மிதா. அப்போதும் அவர் இந்த ஆசிரமத்தை விட்டு வெளியே போனதில்லை. ஏனெனில் சிவசங்கர் பாபாவுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தார் சுஷ்மிதா. அவர் பாபா மீது மரியாதையும் பற்றும் வைத்திருந்தார். அதனால் பாபாவே அவருக்கு அஷ்வின் குமார் என்பவரை திருமணமும் செய்து வைத்தார். பள்ளி மாணவியாக இங்கே வந்து அஷ்வின் குமாருக்கு மனைவியான பின்னரும் கூட கேளம்பாக்கம் ஆசிரம வளாகத்திலேயே சுஷ்மிதா தங்கியிருக்கிறார்.
சுஷ்மிதா பாபாவுக்கு நெருக்கமாக காரணம் என்ன?
பாபாவின் பள்ளியில் படிக்கும் மாணவிகளோடு தனியாகப் பேசுவார் சுஷ்மிதா. அவர்களின் குடும்ப நிலை பற்றி உருக்கமாக விசாரிப்பார். ஏழை பெண்கள், அப்பா அம்மா இல்லாத பெண்கள், அவர்களுக்காக நியாயம் கேட்க யாரும் இல்லாத பெண்கள் போன்றோரை செலக்ட் செய்வார். அவர்களிடம், ‘நான் என்னை பாபாவிடம் ஒப்படைத்தேன். இன்று என்னை குடும்பம், குழந்தைகள், வெளிநாட்டு வேலை என நல்லவிதமாக பாபா வைத்திருக்கிறார். அதேபோல நீயும் உன்னை பாபாவிடம் ஒப்படைத்துவிடு. அவர் உனக்கு எல்லா வகையிலும் நல்ல விதமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்’என்று மூளை சலவை செய்வார். பின் பாபாவிடம் அழைத்துச் செல்வார். அந்த பாபாவின் சொகுசு பங்களாவுக்குள் சென்று வரும் உரிமை சுஷ்மிதா உள்ளிட்ட சிலருக்கே இருக்கிறது.
தான் செலக்ட் செய்து பயிற்சி கொடுத்த மாணவிகளை சுஷ்மிதா பாபாவிடம் அழைத்துச் செல்வார். அங்கே பாபாவின் லீலைகள் தொடங்கும். பாபா தொட்டால் பாவம் போகும் என்று சொல்லி சுஷ்மிதா அழைத்துச் சென்றதால், பல மாணவிகள் அதற்கு வேறுவழியின்றி இணங்கிப்போவார்கள். இப்படியாக பல்வேறு மாணவிகளை பாபாவின் பாலியல் பட்டறையில் பங்கேற்பதற்காக பயிற்சி கொடுத்தவர்தான் சுஷ்மிதா. சுஷ்மிதாவை ஏதோ ஒரு வேலைக்காக நான்கு வருடம் முன்பு துபாய் அனுப்பி வைத்தார் பாபா. பின் அவ்வப்போது வருவார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் கேளம்பாக்கம் வந்தார் சுஷ்மிதா.
சில நாட்களுக்கு முன் அவரைத் தொடர்புகொண்ட ஆசிரம நிர்வாகிகள், ‘ உன் மீதும் புகார்கள் இருக்கிறது. உடனடியாக நீ மீண்டும் துபாய் சென்றுவிடு. இல்லையென்றால் மாட்டிக்கொள்வாய்’ என்று எச்சரித்துள்ளனர். அதன்படியே துபாய்க்கு தப்பிச் செல்ல தயாராக இருந்தார் சுஷ்மிதா. இந்த அலைபேசி உரையாடல்களை தொடர்ந்து கண்காணித்தனர் சிபிசிஐடி போலீஸார்.
சுஷ்மிதா இந்த வழக்குக்கு முக்கியமான துருப்புச் சீட்டு என்பதால் அவரை தப்பிக்க விடக் கூடாது என்று திட்டம் போட்ட சிபிசிஐடி டீம் நேற்று (ஜூன் 18) அவரை கேளம்பாக்கம் வளாகத்திலுள்ள அவர் வீட்டில் வைத்து வளைத்தது. போலீசைப் பார்த்ததும் கதறி அழுதிருக்கிறார் சுஷ்மிதா. அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ‘பாபாவை பார்க்கணும்னு என்கிட்ட கேட்பாங்க. நான் அவங்களை பாபாகிட்ட அறிமுகப்படுத்தி வைப்பேன். எத்தனை பேரை பாபாகிட்ட அறிமுகப்படுத்தி வச்சேனு எனக்கு ஞாபகம் இல்லை. நிறைய பேரை பாபாகிட்ட கூட்டிப் போயி அவர் ப்ளஸிங்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கேன்’என்று கூறியுள்ளார்
சுஷ்மிதா. அவரை நேற்று இரவே நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட பின்னர் செங்கல்பட்டு சிறையில் பெண்கள் பிரிவு இல்லாததால், இன்று (ஜூன் 19) அதிகாலை 3 மணிக்கு சென்னை புழல் சிறையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார் சுஷ்மிதா.
சிவசங்கர் பாபா வழக்கில் இந்த சுஷ்மிதாவின் வாக்குமூலம் முக்கியப் பங்காற்றும் என்கிறார்கள் சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்களில்.
**-வணங்காமுடி வேந்தன்**
�,”