இந்தி தெரியாவிட்டால்… ஆயுஷ் செயலாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

politics

யோகா மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுக்கான காணொலி பயிலரங்கில் கடந்த 20ஆம் தேதி பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேகா, “நான் இந்தியில் பேசப்போவதால், ஆங்கிலத்தில் பேச்சை எதிர்பார்ப்பவர்கள் இங்கிருந்து சென்றுவிடலாம்” என்று கூறினார். இது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத்திலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசின் செயலாளராக உள்ள ஓர் உயரதிகாரி, இப்படி அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழிவெறி தலைக்கேறி, பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது.இவருக்கு ஆயுஷ் துறை செயலாளராக இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்புக் கொடுத்திருப்பது, ஆவேசத்துடன் இந்திப் பிரச்சாரம் செய்வதற்கும் – நம் அன்னைத் தமிழ் மொழியை அவமதிப்பதற்குமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழியிடம் வீண் வம்பு செய்த அதிகாரிமீது அப்போதே மத்திய பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் நேற்றைக்கு ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொட்டேகா இப்படி மொழி வெறி பிடித்துப் பேசியிருக்க மாட்டார் என்ற ஸ்டாலின், “ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பது – ‘மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் எங்களின் திட்டம்’ என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது” என்று சாடினார்.

மேலும், ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கொட்டேகா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்ட அவர், “பயிற்சிகள், கூட்டங்கள் அனைத்தும் இந்தி பேசாத மாநில மக்களின் இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இந்தி பேசாத மக்களுக்கு ஆங்கிலத்தின் மூலம்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆட்சி மொழி சட்டத் திருத்தம் கூறுகிறது. அத்தகைய சட்டப் பாதுகாப்பை மீறுகிற வகையில் மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் இந்தி மொழியை இந்தி பேசாத மக்களிடம் திணித்திருக்கின்றனர்” என்று சாடினார்.

மத்திய அரசின் கூட்டங்களில் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் பயன்படுத்துகிற வகையில் உரிய ஆணையைப் பிறப்பிப்பதற்கு பிரதமர் மோடி உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவர், இல்லையெனில் இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு வழங்கிய உறுதிமொழியை பாதுக்காக்கிற வகையில் தீவிரமான போராட்டத்தை மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

“பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்களுக்கு இவர் வேண்டியவர் என்பதால், ஓய்வு பெற்றதற்குப் பின்னரும் பணி நீட்டிப்புச் செய்யப்பட்டிருக்கிறார். இந்த அமைச்சகத்தின் பெயரே ஆயுஷ் என்று வைத்திருக்கிறார்கள். அதற்குப் பொருள் தரும் ஆங்கில வார்த்தை கிடையாது. மத்திய அரசால் இந்தித் திணிப்பு உச்சக்கட்டத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு நடந்த சம்பவம் சரியான சாட்சியமாகும். மத்திய அரசு இத்தகைய போக்கைக் கைவிட வேண்டும். ராஜேஷ் கோட்டேகாவை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சி வகுப்பை நடத்தியிருந்தால் இந்தி தெரியாத மருத்துவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், ஒரு மொழியில் மட்டுமே பயிற்சி நடத்துவோம். இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறுவது பயிற்சியின் நோக்கத்தையே சிதைப்பதாகும்.

எனவே, மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிட்டு இனிவரும் காலங்களில் அகில இந்திய அளவிலான பயிற்சி வகுப்புகளில் இந்தி மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

“இந்தி பேசாத மாநில மக்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மத்திய அரசு இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மருத்துவர்களிடம் மோசமாக நடந்துகொண்ட ஆயுஷ் செயலாளர் வருத்தம் தெரிவிக்க தொடர்புடைய அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்” என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாட் நாயக்கிற்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கனிமொழி, இனி இதுபோன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்திலும் நடைபெற வழிசெய்ய வேண்டும். இந்தி வரும் இடங்களில், அம்மொழி புரியாதவர்களுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுபோலவே ஆயுஷ் செயலாளர் மீது நடவடிக்கை கோரி கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணியும் கடிதம் எழுதியுள்ளார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *