oஇன்று பூமி பூஜை: விழாக் கோலத்தில் அயோத்தி

Published On:

| By Balaji

ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஆகஸ்டு 5) தொடங்குகிற நிலையில் அயோத்தி விழாக் கோலம் பூண்டிருக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மோடி காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையத்திற்கு வந்து காலை 11.30 மணிக்கு அயோத்தியில் உள்ள சாகேத் கல்லூரி ஹெலிபேடில் வந்திறங்குகிறார். அவர் முதலில் ராமரின் சேவகரான ஹனுமர் கோயிலில் ஏழு நிமிடங்கள் வழிபடுகிறார். பின் தங்குமிடத்துக்கு சென்று ராம ஜென்மபூமி டிரஸ்டிகளுடன் அளவளாவுகிறார். மதியம் ராம ஜென்ம பூமியை அடைகிறார். இதைத் தொடர்ந்து வெள்ளியால் செய்யப்பட்ட பிரதான குழந்தை ராமர் வழிபாடு, கோயில் கட்டப்படும் நிலத்தில் வழிபடுகிறார்.

சரியாக மதியம் 12.44 மணி முதல் மதியம் 12.45 மணி வரை, ஐந்து கூறுகளால் செய்யப்பட்ட மற்றும் ஒன்பது கற்களால் அலங்கரிக்கப்பட்ட தாமரை மலர் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

நிகழ்வுக்குப் பிறகு, ஹெலிபேடில் புறப்படுவதற்கு முன்பு அவர் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

அயோத்தி டி.ஐ.ஜி தீபக் குமார் கூறுகையில், “நகரம் கடுமையான பாதுகாப்பில் உள்ளது. எஸ்.பி.ஜி பாதுகாப்பு மற்றும் கோவிட் தொற்றுநோய் பாதுகாப்பு ஆகிய இரண்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அயோத்தி செல்லும் அனைத்து சாலைகளும் தடுக்கப்பட்டுள்ளன. முறையான சோதனைக்குப் பிறகுதான் அயோத்திக்குள் நுழைய முடியும்” என்று தெரிவித்தார்.

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், மற்றும் 135 சந்நியாசிகள் உட்பட பூமி பூஜையில் 175 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, உபி ஆளுநர் ஆனந்திபன் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளை தலைவர் மகாந்த் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share