முக்கியமான கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டுவந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைத்திடச் செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆனால், சமீப நாட்களாகக் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்தது குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியபோது, முழுமையாகப் பேச வாய்ப்பளிக்காமல், விலை கட்டுக்குள்தான் உள்ளது என்றும், தற்போது சிமெண்ட் விலை மூட்டைக்கு 50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்றும், சட்டப்பேரவையில் பதில் அளித்தனர்.
ஆனால், தற்போது கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.
சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 470 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை 3,000 ரூபாயிலிருந்து ரூ.5,000த்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஒரு யூனிட் ஜல்லி விலை 2000 ரூபாயிலிருந்து 3,800 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஒரு டன் கம்பி ரூ.48 ஆயிரத்திலிருந்து ரூ.78 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஒரு லோடு கிராவல் மணல் 600 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது.
பெயிண்ட்டின் விலையும் தரத்துக்கு ஏற்ப 1 லிட்டர் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அதுபோன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் ஒரு சதுர அடி வீடு கட்டுவதற்குத் தனியார் பொறியாளர்கள் சுமார் ரூ.2,300 வரை நிர்ணயம் செய்திருந்தனர். இது, இன்று குறைந்தபட்சம் 3,100 ரூபாய்க்கு மேல் நிர்ணயம் செய்யப்படுகிறது.
சிமெண்ட் விலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. டெல்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, ஆந்திராவில் ரூ.370, தெலங்கானாவில் ரூ.360, கர்நாடகாவில் ரூ.380 என்ற விலையில்தான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.480 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற கட்டுமான பொருட்களின் விலையும் தமிழகத்தை விட, மற்ற மாநிலங்களில் 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளன.
விலை உயர்வு காரணமாக வீடு, கட்டிடங்கள் கட்டுபவர்கள் மட்டுமின்றி சித்தாள் போன்ற கூலியாட்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தனியார் சிமெண்ட்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் மாதம் முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு அரசின் கவனத்திற்கு வந்தவுடன் முதல்வரின் உத்தரவின் பேரில்,சிமெண்ட் விலையை குறைப்பது தொடர்பாகத் தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் 14.06.2021 அன்று பேச்சுவார்த்தை நடந்தது.
அக்கூட்டத்தில் சிமெண்ட் விலை உயர்ந்துள்ளதால் கட்டுமானத் தொழிலுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படக்கூடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, சிமெண்ட் விலையைக் குறைக்குமாறு தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கிணங்க, தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்களுடைய சிமெண்ட் சில்லரை விற்பனை விலையினை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைத்து, 15.06.2021 முதல் விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக சிமெண்ட் விலையானது 420 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்துச் செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால், கடந்த 6.10.2021 அன்று சிமெண்ட்டின் விலையானது 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலையானது குறைக்கப்பட்டு, தற்பொழுது 440 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.
தற்போது நடைமுறையிலுள்ள சிமெண்ட்டின் விலையானது மார்ச் மாத விலையான ரூபாய் 420-ஐ ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து தற்சமயம் 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது 4.7 சதவீதமே ஆகும். எனவே, சிமெண்ட்டின் இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது. தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்குக் குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 367,677 மெ.டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68.233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது, டான்செம் சிமெண்ட் 350 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.
தனியார் சிமெண்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 சதவீதம் ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், டான்செம் விற்பனையினை அதிகரிக்கத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஓரிரு வாரங்களில், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் வலிமை” என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் “அரசு” சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனுடன், குறைந்த விலையிலும். நிறைந்த தரத்திலும் வலிமை சிமெண்ட் முதல்கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,”