அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பிடென், வெற்றிபெற்றுவிட்டார். அவரும் அவரோடு துணை அதிபராக வெற்றிபெற்றிருக்கும் கமலா ஹாரிஸும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கிறார்கள்.
இவர்களுக்காக வெள்ளை மாளிகை தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு இது உறுதியானவுடன், அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்து உரையாற்றினார் ஜோ பிடென். ஆனால் அமெரிக்க அதிபராக இருந்து முறைப்படி முன்னாள் அதிபராகும் டிரம்ப்போ, பிடெனின் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளவே இல்லை.
அவர் தனக்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிடென் வெற்றிபெற்ற தகவல் அவருக்குச் சொல்லப்பட்டது. சில மணி நேரங்களில் அவர் தனது ட்விட்டரில், “தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. நானே தேர்தலில் வென்றேன். மோசடி நடந்திருக்கிறது”என்று பதிவிட்டார்.
அதேநேரம் உலகத் தலைவர்கள் பிடெனுக்கு வாழ்த்துகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நேரப்படி நவம்பர் 8 அதிகாலை 3.24 மணிக்கு ட்விட்டர் பதிவிட்ட டிரம்ப் அதன் பிறகு கருத்து எதுவும் வெளியிடவில்லை. சுமார் 12 மணி நேரமாக அவரிடமிருந்து ட்விட்டர் பதிவு இல்லை. அவர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடுக்கப் போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், டிரம்ப்பை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் அவரது மருமகனும், மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் ஈடுபட்டிருக்கிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அசோசியேட்டர் பிரஸ், சி.என்.என். ஆகிய ஊடகங்கள், “டிரம்ப்பின் மருமகன் அவரிடம் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்குமாறு ஆலோசனை கூறியுள்ளார். இதை குஷ்னரே தனது நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார்”என்று செய்தி வெளியிட்டுள்ளன.
டிரம்ப் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் அவருக்கு அடுத்தபடியாக அதிக செல்வாக்காக இருந்தவர் ஜாரெட் குஷ்னர்தான். இவரது அதிகாரம் டிரம்ப் அரசில் பல மட்டங்களில் தலையீடு செய்தன என்று பல சர்ச்சைகளில் சிக்கியவர்தான் டிரம்ப்பின் மருமகன்.
**-வேந்தன்**�,