தனது பயிற்சிக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
அவர் தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும், சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழக அரசிடம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பவானி தேவியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், நேற்று சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்கியது மிகுந்த ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதாக, இந்திய ஒன்றியத்தின் சார்பில், #Olympics போட்டிகளில் வாள்வீச்சுப் பிரிவில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள, தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி நன்றி தெரிவித்துள்ளார்!#DMK pic.twitter.com/eluQGZU7fO
— DMK IT WING (@DMKITwing) June 20, 2021
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “பவானிக்கு பதக்கங்கள் குவியட்டும்! தமிழரின் திறமை உலகெங்கும் கொடிநாட்டட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாள்வீச்சு வீராங்கனை பவானி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “டோக்கியாவில் நடக்கவிருக்கிற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக, முதல் இந்தியராக தேர்வாகியுள்ளேன். அதற்கான சிறப்பு பயிற்சிக்காக இத்தாலியில் இருக்கிறேன். என்னுடைய பயிற்சிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார். இந்த நிதியுதவி எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும். இதற்காக மாண்புமிகு முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். நான் பணிபுரியும் மின்சாரத் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவும், ஊக்குவிப்பும் என்னை அதிகமாக ஊக்கப்படுத்துவதோடு, கடினமாக பயிற்சியில் ஈடுபடவும் வைக்கிறது. உங்களுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் கண்டிப்பாக தேவை. ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கையில் பயிற்சியைத் தொடங்குகிறேன். நன்றி” என்று பேசியுள்ளார்.
**-வினிதா**
�,”