உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது. பதற்றமான சூழல் நீடித்து வருகையில், அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றுக்கு வரவழைத்து, அங்கிருந்து அவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பீகார் மாநில மோத்திஹரி பகுதியைச் சேர்ந்த திவ்யன்ஷு சிங் என்ற மருத்துவ மாணவர் இன்று மதியம் மீட்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அப்போது அவரை ரோஜா பூ கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர்.
அப்போது அவரிடம், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து உதவி கிடைத்ததா என்று என்டிடிவி நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்த திவ்யன்ஷு சிங், “உக்ரைன் எல்லையைக் கடந்து ஹங்கேரி வந்த பிறகுதான் எங்களுக்கு உதவி கிடைத்தது. அதற்கு முன்புவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எல்லாம் எங்கள் சொந்தமுயற்சிதான். நானும் எனது நண்பர்கள் 10 பேரும் சேர்ந்து ஒரு குழுவாகக் கிளம்பினோம். நாங்கள் ரயிலில் ஏறியபோது அந்த ரயில் மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. ரயிலில் இருந்த உள்ளூர்வாசிகள் எங்களுக்கு உதவினார்கள். யாரும் எங்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. போலந்து எல்லையில் சில மாணவர்கள் தாக்கப்பட்டது உண்மைதான். அதற்கு எங்கள் அரசாங்கமே பொறுப்பு. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்திருக்க வேண்டாம். அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேறுமாறு முன்கூட்டியே எச்சரித்தது. அதுபோன்று எங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கலாம்” என்று கூறினார்.
“இப்போது நாங்கள் இங்கே இருப்பதால், எங்களுக்கு ரோஜா பூ கொடுக்கின்றனர். பயன் என்ன? இதை வைத்து நாங்கள் என்ன செய்வோம்? அங்கே எங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எங்கள் குடும்பத்தினர் என்ன செய்வார்கள்?” என்று கேள்விகளை அடுக்கிய மாணவர்,
“உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படி பூ கொடுத்து வரவேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எங்கள் நிமித்தம் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்” என்று ஆவேசமாக பேசினார்.
**-வினிதா**