சட்டமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (மார்ச் 11) தொடங்கியது. நேரமில்லா நேரத்தில் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்த, “மக்களை ஏமாற்றும் தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பவில்லை” என்று கூறி அதனை நிராகரித்தார் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார். இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த நிலையில் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா என்று பதாகையையும் அவர் ஏந்தியிருந்தார். தமிமுன் அன்சாரியை நேரில் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி, போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.
போராட்டத்தை கைவிடுமாறு காவல் துறை அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக தமிமுன் அன்சாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, “பாஜக கூட்டணியில் உள்ள மாநில அரசுகளே என்.பி.ஆரை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், யாருக்கோ பயந்துகொண்டு மிகப்பெரிய வாக்கு வங்கியை அதிமுக இழந்துவருகிறது” என்று தெரிவித்தார்.
**எழில்**
�,”