கலைவாணர் அரங்கை சபாநாயகர் தனபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா பரவல் காரணமாகத் தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவை கடந்த மார்ச் 24 ஆம் தேதியோடு அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அரசியலமைப்பின்படி ஒரு கூட்டத் தொடர் முடிந்த ஆறு மாதங்களுக்குள், அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட வேண்டும். இதனால் வரும் செப்டம்பருக்குள் சட்டமன்ற குளிர்கால கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருக்கும் சட்டமன்றக் கட்டிடத்தில் சாதாரண நாட்களிலேயே இட நெருக்கடி உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் சமூக இடைவெளியுடன் சட்டமன்றக் கூட்டம் நடத்துவதற்கான வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக [கூடுகிறது சட்டமன்றம்: வேறு இடத்தில்!](https://minnambalam.com/politics/2020/08/08/37/tamilnadu-assembly-place-change-anna-Centenary-library) என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்ட செய்தியில், “சட்டமன்றக் கூட்டத்திற்காக புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கம், சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை ஆய்வில் உள்ளன. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படவுள்ளது” என்று சொல்லியிருந்தோம்.
இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவது குறித்து சபாநாயகர் தனபால் இன்று (ஆகஸ்ட் 22) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு செய்தனர். அங்குள்ள இடவசதி சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு ஏதுவாக இருக்குமா என்பதை சபாநாயகர் பார்வையிட்டார்.
கலைவாணர் அரங்கிலுள்ள மூன்றாவது தளத்தில்தான் சட்டமன்ற கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எம்.எல்.ஏ விடுதி அருகில் இருப்பது, பார்க்கிங் வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள், அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
**எழில்**�,