எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகியோரின் நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் சசிகலா செல்ல உள்ள நிலையில் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பிறகு கடந்த ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
எனினும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து செல்போனில் சசிகலா பேசி வந்தார். அவர் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது.
தொண்டர்களின் விருப்பப்படி கட்சியை மீட்டெடுப்போம் என்று கூறிவந்தார். சசிகலாவிடம் பேசிய அதிமுக நிர்வாகிகளை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் நீக்கி வந்தனர்.
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கட்சியின் தலைமை தெரிவித்தது.
இந்நிலையில் வரும் 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் நாளை மறுதினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இதற்காக அமமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சசிகலாவுக்கு திரண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதால் சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தொண்டர்களை அழைத்து வரவேண்டுமென [அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற மா.செ.க்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.](https://minnambalam.com/politics/2021/10/11/17/sasikala-visit-jayalalihta-memorial-ammk-meeting-reception-ammk-flags)
இந்நிலையில், பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை மாவட்ட காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் அக்டோபர் 16ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்த உள்ளதால், அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனுவில், சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள சூழலில் சசிகலாவின் இந்த நகர்வு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**
�,