அரியலூரில் பாமக மற்றும் தவாகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலக சாமிதுரை. இவர் பாமகவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த சாமிநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரியலூர் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில், இவர்கள் இரு தரப்பினருக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்துவந்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இலைக்கடம்பூரில் உலக சாமிதுரை இல்லத்தின் ஒரு பகுதியிலும், சாமிநாதன் வீட்டின் முன்பும் பாமகவினர் வெடி வெடித்துள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினையாகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தகவல் மாவட்ட எஸ்.பிக்குச் சென்ற நிலையில், ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள பாமகவினர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரச்சினை நடந்துகொண்டிருக்கும்போது அதைத் தடுக்க முயன்ற தனிப்பிரிவு காவலர் துரைமுருகன் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தியதில், அவரது மண்டை உடைந்தது. அவரை காவல் துறையினர் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தத் தகவல் மேலிடத்துக்குச் சொல்லப்பட, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு வந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற எஸ்.பி சீனிவாசன், டிஎஸ்பி மதன் உள்ளிட்ட போலீஸார், பெரம்பலூர் மாவட்ட பாமக செயலாளர் உலக சாமிதுரை, நமங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காட்டுராஜா, பாமக ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோரை கைது செய்தனர். தகவலறிந்து அங்கு சென்ற பாமக துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையிலான அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் விசாரணை நடத்தப்பட்டு உலக சாமிதுரை உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதால், பாமகவினர் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக பாமக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**எழில்**�,