ஸ்ரீராம் சர்மா
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் போவோர் வருவோரெல்லாம் அடித்துத் துவைத்த பெயரொன்று உண்டென்றால் அது பி.டி.ஆர்! அப்படி என்ன குற்றம் செய்து விட்டார் அவர்?
சமூக வளைகாப்பு என்பது மாவட்டம்தோறும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சீர் செய்து ஆதரிக்கும் நெகிழ்வானதொரு அரசாங்கத் திட்டம். அதனை, தன் தொகுதியான மதுரையில் முன் நின்று நடத்தப் போனார் பி.டி.ஆர். அதே நாளில் நடந்த ஜிஎஸ்டி குறித்த ஒன்றிய அரசின் அழைப்புக்கு அவர் செல்லாமல், தன் சார்பில் நிதிச் செயலாளரை அனுப்பிவிட்டார்.
அதனால் நாடு ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும், அரசியல் காழ்ப்புணர்வோடு சிலர் அவர் சொன்ன வளைகாப்பைக் கொச்சைப்படுத்தி உசுப்பேத்திவிட, தன் தகுதி மறந்து அதற்குப் பதில் சொல்லப்போனதுதான் நிதியமைச்சர் பி.டி.ஆர் செய்த தவறு!
தன் முதல்வரை மனதில் கொண்டிருந்தால் நிறுத்தி, நிதானமாக, யதார்த்தமான பதில் ஒன்றைச் சொல்லி எதிரியை வென்றிருக்க முடியும். தவறிவிட்டார் பி.டி.ஆர்!
ஆழங்காற்பட்ட படிப்பறிவு, உலகப் பொருளாதார நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம், பாரம்பரியமிக்க குடும்பத்தின் வழித்தோன்றல், அன்றைய முதல்வர் கலைஞரது அரசியல் நுண்ணறிவை விழியசைவில் வழிமொழிந்து சமூகத்துள் செலுத்திய சாதனையாளரின் மகன் என்னும் பற்பல தரவுகளையும் கொண்டுதான் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மாண்புமிகு நிதியமைச்சர் என்னும் மிக உயர்ந்த பொறுப்பு முதல்வரால் அளிக்கப்பட்டிருக்கக் கூடும்.
போலவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்ட விழியசைவில் நின்று தந்தையின் வழிபற்றி அவரும் செயலாற்றுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக இருந்தது!
நிதியமைச்சரின் செயல்பாட்டில் எந்தக் குறையுமில்லை எனினும், பொதுவெளியில் அவர் உமிழ்ந்த சில அவலச் சுவையோடிய கருத்துகள் எப்புறத்தும் எக்களித்து நின்றதே துரதிர்ஷ்டவசமாகிப் போனது!
சகலராலும் அவர் சகட்டு மேனிக்கு அடித்தாடப்படுவதை காணச் சகிக்கவில்லை! அதனை எடுத்துச் சொன்ன கட்சியின் மூத்தவரை அவர் அமைந்து ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். எடுத்துச் சொன்னவரும் பாரிய தத்துவ பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரே என்பதை கொண்டேற்றுக் கொண்டிருக்க வேண்டும் அமைச்சர். மீண்டும், தவறிவிட்டார்!
**அரியவற்று ளெல்லாம் பெரிதே பெரியாரை**
**பேணித் தமராக் கொளல்.**
போகட்டும்! குறைகளற்ற மனிதன் இந்த மண்ணுலகில் இல்லை. குறைகளைக் களைந்து நிறைகளாக்கி எழும் மனிதனுக்கு வானமே எல்லை!
மாண்புமிகு பி.டி.ஆர்… உங்கள் மேல் பேரன்பு கொண்டவன், திராவிடப் பெருமண்ணின் எளிய எழுத்தாளன் என்னும் உரிமையில் துணிந்து சொல்வேன், தமிழ்நாட்டின் பெருங்கொண்ட பதவிக்குரிய நீங்கள் எதிரிகளின் திட்டமிட்ட ட்விட்டர் சீண்டலுக்கு சவாலாடியதும், திராவிடத்தின் பொருளாதார மூளைக்காரரான நீங்கள் கேளிக்கை பழகும் யூடியூபர்களின் பேட்டிகளுக்கு சம்மதித்ததும் பெருந்தவறு!
உங்கள் தகவை அந்த விளையாட்டுப் பிள்ளைகளுக்கு பணயம் வைத்தாடியிருக்கக் கூடாது. இனியேனும் தவிர்த்து விடுங்கள். அமெரிக்க ட்ரம்ப் ‘ஃப்ரீக்காக’ பேசி வல்லாடியது அவர்களது நாகரிகத்துக்கே ஒப்பவில்லை எனும்போது, நமது நாகரிகத்துக்கு எப்படி அது செல்லும்? மாற்றிக் கொண்டாக வேண்டும்.
உங்கள் முன்னோர் எத்தகையாளர்கள், அவர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செய்த கொடைகள் என்னவென்ன என்பதையெல்லாம் மண்ணின் மக்கள் நன்கு அறிந்ததால்தான் வெளிநாட்டில் புழங்கி வந்த உங்களை, மதுரைத் தமிழினை புரளப் பேசத் தெரியாத உங்களை, இன்னமும் ஆதரிக்கின்றார்கள். உங்கள் பெருமையை நீங்களே ஓதுவது அயற்சியைத்தான் தரும்.
குறித்துக்கொள்ளுங்கள், உங்கள் ஆரம்பக் கல்விக்கு அடிகோலிய நீலகிரி லாரன்ஸ் ‘Lovedale’ ஸ்கூலின் பொன்மொழி **NEVER GIVE IN!** அது, ஏட்டுப் பாடம் மட்டுமே!
ஆயிரமாயிரம் அவதூறுகளை புன்சிரிப்போடு ஏற்று, ஆகப்பெரும் பொறுமை காத்து, தன் அகண்ட இளமையை தலைமைக்கு அர்ப்பணித்து, கனிந்த வயதில் அரியணை கண்டு, அவசரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி, சகலரையும் அரவணைத்து, நல்லாட்சிக் காணத் துடிக்கும் இன்றைய முதல்வரின் அரசியல் பண்பாடு ஆயிரம் ‘Lovedale’ ஸ்கூலுக்கு இணையானது!
அதனை உணர்ந்து முதல்வரின் வழிதொற்றி எழுந்து நில்லுங்கள் பி.டி.ஆர்!
தைத்த முற்களை நக்கி எறியும் புலி ஒன்று இனி, இந்தப் பாதையில் வரலாகாது எனக் கண்டு கொள்வதைப்போல கொண்டு எழுங்கள் பி.டி.ஆர்! அஞ்சுவது அஞ்சாமை பேதமை!
இந்த மண்ணுக்கு உங்களால் ஆகக் கூடியது நிறையவே உண்டு. ‘திராவிடப் பெருமண்ணின் வித்து நான்’ எனப் பணிந்து, மேலும் உயர்ந்து வெல்லுங்கள் பி.டி.ஆர்!
புண்பட்டவர்கள் மன்னியுங்கள் என்பராம் பெரியார்!
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
.
�,”