தொல்லியல் படிப்பில் தமிழையும் இணைத்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இது தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. அதற்கான தகுதியாக சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட செம்மொழிகள் இடம்பெற்ற நிலையில், இந்தியாவிலுள்ள தமிழ் இடம்பெறவில்லை.
தமிழ் சேர்க்கப்படாததற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, தமிழைச் சேர்த்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பிரதமருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதிய 2 மணி நேரத்திற்குள் தமிழகத்துக்கு சாதகமான முடிவு கிடைத்திருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ், சமஸ்கிருதம், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பிராகிருதம், அரேபிய, பெர்சிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொல்லியல்துறை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், “மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்பிற்கானத் தகுதியில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், திருத்தப்பட்ட அறிவிக்கையில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடித்தளமாக விளங்குபவை மொழிகளே. அவற்றைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பா.ஜ.க கடைபிடிக்கவும் வேண்டாம்; அதை மாநில அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கவும் வேண்டாம்” என்று குறிப்பிட்டு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுபோலவே, “உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு முறையும் போராடித் தான் பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுவது வருந்தத்தக்கது. எந்த ஒரு மொழியின் பெருமையும் யாராலும் மறைக்க முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
**எழில்**�,