ராஜ்யசபா முடிவுகள்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு சவால்!

Published On:

| By admin

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 57 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ராஜ்யசபா தேர்தல் முடிவுகள், வர இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிரொலிக்கும். ஏனெனில் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் இந்த ராஜ்யசபா தேர்தல் மேலும் கவனம் பெற்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 57 ராஜ்யசபா இடங்களில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பிக்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அவசியப்பட்டது. ஜுன் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில்… அதில் 16 இடங்களில் பாஜக 8 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றிபெற்றது. மகாவிகாஸ் கூட்டணியில் உள்ள சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றன. ஹரியானாவில் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்றார்.

இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ராஜ்யசபாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் ராஜ்யசபாவில் 100 இடங்களைப் பிடித்த பாஜக அதன் பின் அக்கட்சி உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிந்ததால் 95 ஆக குறைந்தது. இந்த ராஜ்யசபா தேர்தலுக்குப் பிறகு ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 92 ஆகக் குறைந்துள்ளது.

அதே சமயம் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 29ல் இருந்து 31 ஆக சற்று உயர்ந்துள்ளது.

மாநிலக் கட்சிகளில், ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர்-காங்கிரஸின் பலம் தற்போதைய ஆறிலிருந்து ஒன்பது இடங்களாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபாவில் 10 இடங்களாக இருக்கிறது.

ராஜ்யசபாவில் திமுகவுக்கு 10 உறுப்பினர்களும், பிஜு ஜனதா தளத்துக்கு 9 பேரும், டிஆர்எஸ் கட்சிக்கு 7 பேரும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 5 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 பேரும், சிவசேனாவுக்கு 3 பேரும் உள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கட்சி 5 என ராஜ்யசபாவில் பலம் பெற்றுள்ளனர். பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுக தற்போது 4 ராஜ்யசபா எம்பிக்களைப் பெற்றுள்ளது.

சுயேச்சையான கபில் சிபல் மற்றும் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோருக்கு சமாஜ்வாடி கட்சி இடம் கொடுத்துள்ளதால், சமாஜ்வாடி கட்சியின் பலம் தற்போது உள்ள ஐந்தில் இருந்து மூன்றாக குறைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்பி, ஒரு உறுப்பினர் மட்டுமே இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) இப்போது இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. அதேநேரம் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்த சிரோமணி அகாலி தளம் அதன் அனைத்து எம்.பி.க்களும் ஓய்வு பெறுவதால் ராஜ்யசபாவில் எந்த உறுப்பினரும் இல்லை.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராஜ்யசபா உறுப்பினர்களின் வாக்கு முக்கியம் என்பதால்… தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் பெரும்பான்மையை விட சற்று குறைவாகவே உள்ளன.

இந்த நிலையில் பா.ஜ.,வின் சில கூட்டணி கட்சிகளையும் வென்று, போட்டியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் அவருக்கு விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நிதிஷ் இப்போது வரை பாஜகவின் கூட்டாளியாக இருக்கிறார். ஆனால் அவர் எதிர்க்கட்சிகளோடு சேர முடிவு செய்தால் ஆளும் கூட்டணிக்கு எதிரான நிலை மாறக்கூடும். எவ்வாறாயினும் அவர் பி.ஜே.பி-யுடனான உறவை முறித்துக் கொள்வது பற்றி எந்த அறிகுறியும் தெரிவிக்கவில்லை.

பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகளின் பலம் பாஜக வேட்பாளருக்கு கடுமையான சவாலாக இருக்கும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, பாஜக அல்லாத கட்சிகளுடன் பேசவும், எதிர்க்கட்சி பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் நியமித்துள்ளார். மம்தா பானர்ஜியும் 15 அரசியல் தலைவர்கள், முதல்வர்களை அழைத்து ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்துகிறார்.

ராஜ்யசபா தேர்தல் முடிவுகளுக்கு முன்னால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளில் பாதியை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாக கணக்கீடுகள் தெரிவித்தன. ஆனால், இப்போதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் கூட ஒன்றாக சேர்ந்தால் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவால்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share